கடந்த வியாழக்கிழமை 27ம் திகதி தமிழ்ப் பகுதிகளெங்கும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் பங்குபற்றியிருந்தார்கள். ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான மக்களும், பெரும்பாலான அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒற்றுமையாகச் செயற்பட்ட மிக அரிதான ஒரு சம்பவம் இது எனலாம். கடைகளை மூடக்கோரி யாரும் எங்கேயும் பெரும் சாலைகளில் ரயர்களைக் கொழுத்தவில்லை, யாரும் எங்கேயும் திறக்கப்பட்ட கடைகளை நோக்கி கற்களை வீசவில்லை. யாருடைய வற்புறுத்தலுமின்றி, அச்சுறுத்தலுமின்றி தன்னியல்பாக தாமாக முன்வந்து தமிழ் மக்கள் அன்றைய நாளை ஸ்தம்பிக்கச் செய்தார்கள். தமிழகத்தில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு ஒரு கடையடைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட மறுநாள் ஈழத்தில் இது நடந்தது.
மேற்படி கடையடைப்பு தொடர்பாக பல்வேறு வகைப்பட்ட விமர்சனங்களுண்டு. ஒரு நாள் கடையடைப்பினால் அரசாங்கத்தை அசைத்து விடலாமா? என்று ஒரு கேள்வி. இவ்வாறு கடைகளை அடைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் பாதிப்புக்களை விட தனியார் துறைக்கும், சாதாரண தமிழ் மக்களுக்குமே அதிகரித்த அளவில் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு. ஹர்த்தால் எனப்படுவது வீட்டுக்குள் இருந்தபடி எதிர்ப்பைக் காட்டும் ஒரு முறை. அன்றைய நாளை பெரும்பாலானவர்கள் ஒரு விடுமுறையாகவே கழிக்கிறார்கள். இவ்வாறு விடுமுறையாக ஒரு நாளை அனுபவிப்பதை எப்படி ஒரு போராட்டம் என்று அழைக்கலாம்? என்றும் ஒரு கேள்வி. இவை தவிர சாதாரண சனங்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கச் செய்வதற்குமப்பால் தமிழ் மக்களை போராட வைக்க முடியாத அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு சுகமான போராட்டமே ஹர்த்தால் என்றும் ஒரு விமர்சனம்.
மேற்படி விமர்சனங்களில் ஓரளவிற்கு உண்மையுண்டு. தமிழ்த் தலைமைகளின் இயலாமையின் வெளிப்பாடே கடையடைப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து அரச எந்திரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி அதன் மூலம் ஒரு தீர்வைப்பெறத் தேவையான அரசியல் திடசித்தமோ, தரிசனமோ, வாழ்க்கை ஒழுக்கமோ, அரசியல் ஒழுக்கமோ இப்போதிருக்கும் தமிழ்த்தலைவர்களில் எத்தனை பேரிடமுண்டு?
ஒரு மக்கள் போராட்டம் எனப்படுவது பிரதானமாக இரண்டு விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். ஒன்று அது அதிகாரத்தை அசைக்க வேண்டும். அதை நெருக்கடிக்குள்ளாக்கி போராடும் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும். இரண்டாவது ஒரு போராட்டம் அதை முன்னெடுக்கும் மக்கள் மத்தியில் போராட்ட நெருப்பை அணைய விடாது பேண வேண்டும். கடந்த வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கடையடைப்பு இதில் இரண்டாவது விளைவை ஓரளவிற்கு ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். யாரும் நிர்ப்பந்திக்காமலே அது கடைப்பிடிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் சிறு தொகை போராட்டக்காரர்களுக்கு பெருந்தொகை வெகுசனங்கள் தமது ஆதரவை வெளிக்காட்டிய ஒரு போராட்டம் அது.
இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும் கடையடைப்பு எனப்படுவது பல்வேறு வகைப்பட்ட அறவழிப் போராட்டங்களில் ஒன்றுதான். அது மட்டுமே அறவழிப் போராட்டம் அல்ல. ஒரு கடையடைப்பின் போது குறிப்பிட்ட பிரதேசத்தின் நிர்வாகச் செயற்பாடுகளும், பொருளாதாரச் செயற்பாடுகளும் பெருமளவிற்கு முடக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு வேலைநாள் விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது அரசாங்கத்தால் வேலை நாளாக அறிவிக்கப்பட்ட ஒரு நாளை பொது மக்கள் விடுமுறை நாளாக அனுஷ;டிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டுகிறார்கள். இதன் மூலம் அன்றைய நாளின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் முடக்கப்படுவதால் அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் நட்டம் ஏற்படுகிறது. அதே சமயம் அன்றைய நாளில் தமது வருமானத்தை இழக்கும் மக்களுக்கும் நஷ;டம் ஏற்படுகிறது. ஆனால் போராட்ட நோக்கு நிலையிலிருந்து பார்க்கும் பொழுது அதை நஷ;டம் என்று அழைக்க முடியாது. ஒரு பொது இலக்கிற்காக சாதாரண சனங்கள் செய்த அர்ப்பணிப்பு என்றும் அதை விளங்கப்படுத்தலாம். கடந்த ஆண்டு குளப்பிட்டிப் படுகொலைகளுக்கு எதிராகவும் ஒரு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது உள்ளூரில் பெட்டிக்கடை வைத்திருந்த ஒரு சாதாரண தமிழ்ப்பெண் பின்வருமாறு சொன்னார். ‘எங்கட பெடியல் ரெண்டு பேர அவங்கள் சுட் டிருக்கிறாங்கள். அதுக்கு நாங்கள் எதிர்பபக் காட்ட வேணும். அதுக்குத்தான் கடையை மூடினனான்’என்று.
எனவே ஒரு கடையடைப்பு என்று வரும் பொழுது அதில் ஒரு சகோதரத்துவம் இருக்கிறது. எதிர்ப்பு இருக்கிறது. அர்ப்பணிப்பு இருக்கிறது. இப்படிப் பார்த்தால் அங்கே ஏதோ ஒரு விகிதமளவிற்கு போராட்ட நெருப்பு அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் ஒரு கடையடைப்பு எனப்படுவது தனக்கென்று வரையறைகளைக் கொண்ட ஒரு போராட்ட முறைமைதான். முழுக்க முழுக்க வீரத்தினாலும், தியாகத்தினாலும் கட்டியெழுப்பப்பட்ட ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் கடந்த எட்டாண்டுகளாக கடையடைப்புப் போன்ற வரையறுக்கப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் பொழுது விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.
ஆனால் ஒரு கடையடைப்பு மட்டுமல்ல அது போன்ற பல்வேறு வகைப்பட்ட வன்முறை சாராப் போராட்டங்களும் தேங்கி நிற்கின்ற அல்லது திசை வழி தெரியாது தடுமாறி நிற்கின்ற அல்லது நீர்த்துப் போகின்ற ஒரு காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொம்மியுனிசத்தின் வீழ்ச்சி, நிதி மூலதனப் படர்ச்சியும் அதன் விளைவாக முழு உலகமும் ஏறக்குறைய ஒரே பொருளாதார அலகாக மாற்றப்பட்டிருக்கும் ஒரு நிலமை, கோப்ரேற் நிறுவனங்களின் கட்டுக்கடங்கா வளர்ச்சி, இணையப் பெருக்கமும், சமூக வலைத்தளங்களின் எழுச்சியும், உலகளாவிய இஸ்லாமிய ஆயுதப் போராட்டம், சீனப்பேரரசின் எழுச்சி போன்ற பல்வேறு வகைப்பட்ட காரணிகளினதும் திரண்ட விளைவாக உலகம் ஒரு முட்டுச் சந்தியில் வந்து நிற்கிறது. இச் செல்பி யுகத்தை அல்லது கைபேசி யுகத்தை அல்லது பலதுருவ பல்லரங்க உலகை (Multiplex World) ஒட்டுமொத்தமாகப் பார்த்து ஒட்டுமொத்தமாக விளங்கிக் கொள்வதற்கு அதற்கு வேண்டிய பூகோள தரிசனத்தைக் கொண்ட மேதைகள் தேவைப்படுகிறார்கள். ஒர் கார்ல்மாக்ஸைப் போல,ஐன்ஸ்ரீனைப் போல மனித குலத்தை ஒட்டுமொத்தமாக விளங்கப்படுத்தவல்ல மேதைகள் தேவைப்படுகிறார்கள். ஒரு நண்பர் கூறுவது போல இது ஒரு ‘அப்ளிக்கேசன் வேர்ள்ட்’.
மாக்சியம் எனப்படுவது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலுமான ஐரோப்பிய அறிவியல் ஞானத்தின் திரட்சி என்று கூறப்படுகின்றது. மாக்சியத்தை ஒரு அரசாட்சி தத்துவமாக பிரயோகித்த கடந்த நூற்றாண்டை அதாவது இருபதாம் நூற்றாண்டை அதில் எழுச்சி வீழ்ச்சிகளோடும், புதிய வளர்ச்சிகளோடும் தொகுத்துப் பார்க்கும் பொழுதுதான் மனித குலம் இப்பொழுது எதிர்நோக்கும் நெருக்கடிகள் பலவற்றுக்கும் தத்துவார்த்த முடிவுகளை கண்டடைய முடியும். கெடுபிடிப் போரின் வீழ்ச்சிக்குப்பின் மேற்கத்தைய நாடுகள் சிவில் சமூகங்களையும், அரசு சாரா அமைப்புக்களையும் அதிகம் உற்பத்தி செய்து அதன் மூலமே சமூக முரண்பாடுகளை தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கையாள முற்படுகின்றன. இதில் அரசுக்கு நிதி வழங்கும் அதே கட்டமைப்புக்குத்தான் அரசுக்கு எதிரான சிவில் அமைப்புக்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும், செயற்பாட்டியக்கங்களுக்கும் வேறுவேறு முகவர்களுக்கூடாக நிதி உதவிகளைச் செய்கின்றது. இதன் மூலம் அரசும் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. எதிர்ப்பாளர்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வருகிறார்கள். இவ்வாறான ஓர் உலகச் சூழலில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களைக் குறித்து உலகளாவிய ஒட்டுமொத்தத் தரிசனம் ஒன்று தேவைப்படுகிறது.
கோப்ரேற் நிறுவனங்களின் எழுச்சியை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட அமெரிக்காவின் வோவல்ற் ஸ்ரீற் முற்றுகைப் போராட்டத்திற்கு என்ன நடந்தது? பலஸ்தீனத்திலும், காஷ;மீரிலும் இன்ரிபாடாவிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட கொதிப்புக்கும், மாணவர் எழுச்சிகளுக்கும் என்ன நடந்தது? தீபெத்தில் 2009இலிருந்து பௌத்த துறவிகளும், பொது மக்களும் தீக்குளித்து வருகிறார்கள். இதுவரையிலும் 148 பேர் தீக்குளித்திருக்கிறார்கள். இதில் 128 பேர் இறந்து போய் விட்டார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னரும் ஒருவர் அங்கு தீக்குளித்தார். சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தீபெத்தியர்கள் தொடர்ச்சியாக தீக்குளித்து வருகிறார்கள். ஆனால் சீனப் பேரரசு அசையவில்லை.
இந்தியாவிலும், தமிழ் நாட்டில் ஒரு முத்துக்குமார் தீக்குளித்தார். செங்கொடி தீக்குளித்தார். ஐ.நா முன்றலில் ஒரு முருகதாஸ் தீக்குளித்தார். இத் தீக்குளிப்புக்களால் ஈழத்தமிழர்கள் தொடர்பான சக்தி மிக்க நாடுகளின் முடிவுகளில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டனவா?அண்மை மாதங்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். இன்று வரையிலும் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஈழத்தில் அண்மை மாதங்களாக நில மீட்பிற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் மக்கள் போராடி வருகிறார்கள். சிறு தொகுதி பாதிக்கப்பட்ட மக்களே இப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இப் போராட்டங்கள் யாவும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட போராட்டங்கள். கருத்துமைய செயற்பாட்டியக்கங்களாலோ அல்லது அரசியல் இயக்கங்களாலோ முன்னெடுக்கப்படாதவை. இப் போராட்டங்களுக்கு தலைமை தாங்க எந்தவொரு கட்சியும் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு வலிமை பெற்று வந்த ஒரு பின்னணியில், ஜெனீவாக் கூட்டத் தொடரின் பின் இப் போராட்டங்கள் தொய்யத் தொடங்கிய ஒரு பின்னணியில் தமிழ் மக்கள் பேரவை இப் போராட்டங்களை நோக்கி சற்றே திரும்பியது. அதன் விளைவாக மேற்கொள்ளப்பட்டதே வியாழக்கிழமை கடையடைப்பு ஆகும்.
அண்மை வாரங்களாக போராடும் மக்கள் அரசாங்கம் தம்மைத் திரும்பிப் பார்க்கவில்லையென்றால் தாம் தமது போராட்ட வழிமுறைகளை மாற்ற வேண்டியிருக்கும் என்று எச்சரித்து வருகிறார்கள். ஆனால் அடுத்த கட்டப் போராட்டம் எது என்பது குறித்து ஒரு சரியான வழி வரைபடம் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகளாவிய வெகுசனப் போராட்டங்களின் இன்றைய நிலை குறித்து ஒட்டுமொத்தப் பார்வையும், விவாதமும் இல்லாத ஒரு வெற்றிடத்தில் ஓரு புதிய போராட்ட வடிவம் குறித்து சிந்திக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்புவரை தமிழக விவசாயிகள் டெல்லியில் விதம்விதமாகப் போராடினார்கள். ஒரு பக்க மீசையை வழித்தார்கள். மொட்டையடித்தார்கள். சேலையணிந்தார்கள், தலைகீழாய் நின்றார்கள், பிரதட்டை செய்தார்கள், அரை நிர்வாணமாக நின்றார்கள், முக்கால் நிர்வாணமாக நின்றார்கள், மண்டை ஓடுகளை வைத்துக் கொண்டு பிச்சையெடுத்தார்கள், தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு காட்சியளித்தார்கள் இப்படி என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள். இந்திய அரசாங்கம் அசையவில்லை. ஏதோ வினோதஉடைப் போட்டியைப் பார்ப்பது போல அல்லது சேர்க்கஸ் விலங்குகளைப் போல இந்திய அரசாங்கம் அவர்களைப் பார்த்தது.
அதே சமயம் காஷ;மீரில் கல்லெறியும் போராட்டக்காரர்களோடு இப்பொழுது பெண்களும் இணைந்து விட்டார்கள். அங்கே தொடர்ச்சியாக பெண்களுக்கெதிராக மேற்கொண்டு வரும் வன்முறைகளுக்கெதிராக பெண்கள் தவிர்க்க முடியாதபடி வீதியில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளரான ஒரு பெண் தனது அணியினரோடு பயணம் செய்த வழியில் படையினருக்கும், கல்லெறிபவர்களுக்குமிடையே சிக்கவேண்டி வந்தது. படையினர் திருப்பித் தாக்கிய பொழுது அவரும் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக அவர் இன்ரிபாடாவில் இணைந்தார்.அவரைப் பின்பற்றி பலரும் இணையத் தெடங்கி விட்டார்கள். ஒரு கையில் கால்ப்பந்தும் இன்னொரு கையில் கல்லுமாக அவர் தோன்றும் காட்சி காஷ;மீரில் இன்ரிபாடாவின் ஒரு புதிய கட்டத்தைக் காட்டுகின்றது.
இத்தகையதோர் பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியற் சூழலில் ஈழத்தமிழர்கள் தமது புதிய அறவழிப் போராட்ட முறைகள் தொடர்பில் அறிவுபூர்வமாகவும், தீர்க்கதரிசனத்தோடும் சிந்திக்கவும், உரையாடவும் வேண்டிய ஒரு கட்டத்துக்கு வந்து விட்டார்கள். இல்லையென்றால் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் சோரத் தொடங்கிவிடும்.
காணி விடுவிப்பில் அரசாங்கம் ஒரு கட்டம் வரை விட்டுக்கொடுக்கும். ஏனெனில் படையினரின் பிடியிலிருப்பது பல்லாயிரம் ஏக்கர் காணி. தமிழ் மக்கள் கேட்பதோ மிகச் சிறிய தொகை. எனவே ஒரு தொகுதி நிலத்தை அவர்கள் விட்டுக்கொடுக்கக்கூடும். பிலக்குடியிருப்பில் விட்டுக் கொடுத்தது போல. ஆனால் அப்படி விட்டுக்கொடுத்தாலும் மக்கள் படைத்தளங்களின் நிழலில்தான் மீளக்குடியமர வேண்டியிருக்கும். பிலக்குடியிருப்பைப் போல அதாவது வாயைத் திறந்திருக்கும் ஒரு திமிங்கிலத்தின் வாய்க்குள் வசிப்பது போல.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வைத் தருவது அப்படியல்ல. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுப்பதென்றால் காணாமல் ஆக்கியவர்களை விசாரிக்கவும், தண்டிக்கவும் வேண்டும். தென்னிலங்கையில் இப்பொழுது வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் அவர்களை அரசாங்கம் விசாரிக்குமா? இல்லை. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசாங்கம் ஒரு முழுமையான தீர்வைத் தராது. இதன் பொருள் என்னவெனில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் இப்போதிருப்பதை விடவும் தாக்கமானதாகவும், வீச்சானதாகவும், தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள்மையப் போராட்டங்களை கோட்பாட்டுமைய அரசியல் இயக்கங்கள் ஒருங்கிணைத்துத் தலைமை தாங்க வேண்டும். இன்னொரு புறம் இலங்கைத்தீவின் நீதிப்பரிபாலன கட்டமைப்பை அம்பலப்படுத்தும் விதத்தில் காணாமற் போனவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தமிழ் சட்டத்தரணிகள் இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடமும் உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடமும் உதவிகளைப் பெறலாம். முதலில் அதற்குத் தேவையான சட்டச் செயற்பாட்டியக்கங்களை உருவாக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வழக்குகள் அவற்றின் வளர்ச்சிப்போக்கில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்தும். அது உள்நாட்டு விசாரணைகளுக்கூடாக நிலைமாறுகால நீதியை நிலைநாட்ட முடியாது என்பதைத் தூலமான விதங்களில் எண்பிக்க உதவும். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்ளுக்காக கடையடைப்பை ஒழுங்கு செய்த பேரவையும், கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் அடுத்த கட்டமாக ஒரு சட்டச்செயற்பாட்டியக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.
ஒரு நாள் கடையடைப்பும், ஒரு நாள் கவனயீர்ப்பும், ஒரு நாள் எழுக தமிழும் தேவைதான். ஆனால் அவை மட்டும் போதாது. அவற்றை விடவும் வீச்சானதாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் வேறு எதையவாது யோசிக்கவும், செய்யவும் வேண்டியிருக்கிறது.