முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை எதிர்த்து காலி முகத் திடல் மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் மஹிந்த உள்ளிட்டவர்கள் பங்கேற்றால் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை எடுப்பதற்காக மே தினக் கூட்டத்தின் பின்னர் கட்சியின் மத்திய செயற்குழு கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்காலிக அடிப்படையில் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்து ஒழுக்காற்று விசாரணை நடத்தி கட்சியிலிருந்து முழுமையாக நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி கட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எவரேனும் ஓர் உறுப்பினர் கட்சி கொள்கைகளை மீறிச் செயற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.