கடந்த 2009ம் ஆண்டில் 48 மணித்தியால யுத்த நிறுத்த அறிவிப்பினை தாம் கடுமையாக எதிர்த்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 48 மணித்தியால யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது எனவும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என தாம் அரசாங்கத்தை கோரியதாகவும் எனினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்த நிறுத்தத்ததை அமுல்படுத்தியதாகவும் அதன் போது புலிகள் சற்றே முன்நகர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் படையினர் பாரியளவு இராணுவ தளவாடங்களையும் இடங்களையும் இழக்க நேரிட்டது எனவும் சரத்பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுவதாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.