ஏயர்டெல் மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமுலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏயர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம் நீதிமன்றம் குறித்த வழக்கு தள்ளுபடி செய்தது.
இந்தநிலையிலேயே கறுப்புப் பணம் பற்றி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் முறையாக பரிசீலனை செய்யவில்லை எனத் தெரிவித்து அவர்களை விடுவித்தமைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமுலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.