173
கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தின் 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இன்மையால் அறுநூறு மாணவர்களை கொண்ட பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆறு அதிபர்கள் காணப்படுகின்றனர் என பெற்றோரும் கல்விச் சமூகமும் கவலை தெரிவித்துள்ளனர்.
க.பொ.த உயர்தரத்தில் கலை வர்த்தக பிரிவுகளை கொண்ட பாடசாலையாக அறுநூறு மாணவர்களை கொண்டுள்ள பாடசாலையாக காணப்படுகின்ற முட்கொம்பன் பாடசாலை மீள் குடியேற்றத்தின் பின்னர் படிப்படியாக கல்வியில் வளர்ச்சியடைந்து வந்த நிலையில் இந்த அதிபர் வெற்றிடமும் அங்கு நிலவும் ஆசியர் வெற்றிடமும் மிகமோசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்படி பாடசாலையில் கணித பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் ஒருவரும் இல்லாத நிலை காணப்படுகிறது. அவ்வாறே விஞ்ஞானப் பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் எவரும் இல்லை இந்த நிலைமை கடந்த பல மாதங்கள் காணப்படுகிறது. அத்தோடு உயர்தரத்திற்கு இந்து நாகரீகத்திற்கும் ஆசிரியர் இல்லை என தெரிவிக்கும் பெற்றோர்கள் இந்த நிலைமை தங்களின் பிள்ளைகளின் கல்வியை அழிக்கும் நிலைக்கு கொண்டுச் செல்லும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் ஆறு அதிபர்கள் காணப்படுகின்றனர் அதிபர் தரம் இரண்டில் இரண்டு அதிபர்களும், தரம் மூன்றில் மூன்று அதிபர்களும், தரம் ஒன்றில் ஒருவரும் உள்ளனர். மேலும் மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் இரண்டில் இரண்டு அதிபர்கள் கடமையாற்றுகின்றனர், பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் தரம் இரண்டு அதிபர் அதிபராக கடமையாற்ற தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர் ஒருவர் எவ்வித பொறுப்பும் இன்றி காணப்படுகின்றார்.இராமநாதபுரம் பாடசாலையில் தரம் இரண்டு அதிபர்கள் இருவர் உள்ளனர்,இராமநாதபுரம் மேற்கு பாமசாலையில் தரம் இரண்டு அதிபர் ஒருவரும் தரம் மூன்று அதிபரும் ஒருவரும் உள்ளனர் இவ்வாறு மாவட்டத்தின் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மனித வளம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம பாடசாலைகள் போதுமான வளங்கள் இன்றி தொடர்ச்சியாக காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர், மாவட்டத்தைச் சேர்ந்த வட மாகாண கல்வி அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என இவர்கள் கல்வி புலத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் குறிப்பாக வட மாகாண கல்வி அமைச்சர் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்தவர் இருந்தும் மாவடத்தின் கல்வி வளர்ச்சியில் அக்கறையின்றி செயற்படுவதாக கல்விச் சமூகம் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love