தமிழகத்தில் கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளில் தீர்ப்புகளை எழுதலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1994-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனினும் இந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, சிரேஸ் சட்டத்தரணியான ரத்தினம் என்பவர் மதுரை கிளையில் 2015-ம் ஆண்டு மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றில் சட்டத்தரணி வசந்தகுமார் என்பவரால் வழக்குதொடரப்பட்டது. தமிழில் மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டால், வெளிமாநிலத்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், ஆங்கிலத்திலும் தீர்ப்பு அளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் கீழ் நீதிமன்றங்களில்; தமிழில் மட்டுமே தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்ததுடன் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தீர்ப்பு வழங்கலாம் என்று உத்தரவிட்டனர்.