தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தடுப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது. எனினும் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு சட்ட மா அதிபர் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்குவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் அசமந்தமான போக்கே ராஜபக்ஸக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதற்கான காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை பூர்த்தி செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்படும் போது, சட்ட மா அதிபர் உரிய நேரத்தில் அதற்கான பதிலை அளிக்காது காலத்தை கடத்தி வருவதாகவும், இதனால் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஒவ்வொரு விசாரணைகள் தொடர்பிலும் காத்திருக்க நேரிடுவதாகவும், கால தாமதம் காரணமாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான நந்தன லொக்குவிதாரன, டுபாய் மாரியோட் ஹோட்டல் கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்கு இதுவரையில் சட்ட மா அதிபர் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை நந்தன லொக்குவிதாரண தற்போது மைத்திரி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவருடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், மஹிந்த பதவி வகித்த காலத்தில் லொக்குவிதாரணவின் ஊடாக டுபாயில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பனாமா ஆவணங்களிலும் லொக்குவிதாரணவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழில்: குளோபல் தமிழ்ச் செய்திகள்:-