இந்திய பிரதமர் நரேந்திர மோடி பௌத்த மதத்தை இழிவுபடுத்தியுள்ளதாக தேசிய அமைப்புக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். ஒரு இன சமூகத்திற்கு மட்டும் இந்திய பிரதமர் உரையாற்றியுள்ளதாகவும் இது பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய பிரதமர் மீதோ அல்லது இந்திய அரசாங்கம் மீதோ எவ்வித எதிர்ப்பும் கிடையாது என தெரிவித்துள்ள அவர்இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் சில சந்தர்ப்பங்களில் இந்தியா நோக்கியும் சில சந்தர்ப்பங்களில் சீனா, அமெரிக்கா நோக்கியும் சாய்வதாகவும் இந்த நாட்டை துண்டாடவோ அல்லது நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யவோ அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள எல்லே குணவன்ச தேரர் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் சிங்கள பௌத்தர்கள் மட்டுமன்றி இந்திய வம்சாவளித் தமிழர்களும் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.