உலகளாவிய ரீதியில், பிரான்ஸின் அந்தஸ்த்தை மீட்டெடுக்க உள்ளதாக புதிதாக பதியேற்றுள்ள 39 வயதான பிரான்ஸின் இளம் ஜனாதிபதி இம்மனுவெல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பதற்கு முன்னதாக, பதவியில் இருந்து செல்கின்ற சோஷலிச அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு மக்ரோங் ஒரு மணிநேரம் கலந்துரையாடியுள்ளார்.
பிரான்ஸின் அணுசக்தி ஆயுத தொகுதிகளின் குறியீடுகளை புதிய ஜனாதிபதியிடம் வழங்கிய பின்னர், நாட்டை நல்ல நிலைமையில் விட்டுவிட்டு செல்வதாக கூறிய பிரான்சுவா ஒலாந்த், ஜனாதிபதி மாளிகையைில் இருந்து வெளியேறிச் சென்றார்.
நாட்டின் ஆயுதப்படையோடு ஒன்றிணைப்பை காட்டும் அடையாளமாக பச்சை நிற திறந்த ராணுவ வாகனத்தில் பாதுகாவலர்கள் சூழ மக்ரோங் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் இரண்டு உலகப் போர்களிலும் தங்களுடைய உயிரை தியாகம் செய்த படையினருக்காக ஆர்க் டி திரியோம்ஃபேக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நினைவிட கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மக்ரோங் “அணையாமல் எரிகின்ற விளக்கை” மீண்டும் ஏற்றி வைத்தார்.
பிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஆரம்பம்: புதிய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங்:
நெப்போலியனுக்கு பிறகு மிகவும் இளம் ஜனாதிபதியாக உருவாகியிருக்கும் மக்ரோங், நாட்டின் அரசியல் ஒழுங்குகளை சீர்திருத்தம் செய்வதாகவும், பொருளாதாரத்தில் புத்துணர்வு ஏற்படுத்தப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின் சில மாதங்களில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவருடைய கட்சியின் வெற்றியைப் பொறுத்தே அவரது செயற்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாளை திங்கள்கிழமை காலை புதிய பிரதமராக யார் பணியாற்றயுள்ளார் என்பதை ஜனாதிபதி மக்ரோங் அறிவிக்கவுள்ளார். (படங்கள் – AFP)