பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வழக்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் அண்மையில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அந்த தீர்ப்பிற்கு எதிராக கீதா குமாரசிங்க உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், உறுப்புரிமை ரத்து செய்வது குறித்த தீர்ப்பினை இடைநிறுத்துமாறும் உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், குறித்த வழக்கு பாராளுமன்றிலும் இலங்கை அரசியலிலும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்கு விசுவாசமான ஒருவரை நியமிக்கும் நோக்கில் தூர நோக்கற்ற வகையில் அரசாங்கம் கீதா குமாரசிங்கவிற்கு வழக்குத் தொடர்ந்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார். கீதா குமாரசிங்கவின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டால் சில வேளைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட அனைத்து வேட்பாளர்களது பட்டியலும் நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என சில சட்ட வல்லுனர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நிராகரிக்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களையும் இழக்க நேரிடும் எனவும் சட்ட வல்லுனர்களின் இந்த நிலைப்பாடு தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டால் அதன் முழு நலன்களும் ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.