பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார்.
இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்றலிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன், மற்றும் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது.
இதில் மக்ரோன் 65 சதவிகித வாக்குகளுடன் வெற்றிபெற்றார். இதனையடுத்து, நேற்று முன்தினம் 39 வயதான மக்ரோன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், வலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரான 46 வயதுடைய எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்து, ஜனாதிபதி மேக்ரான். அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தற்போது எம்.பி.யாக இருக்கும் எடோர்ட் பிலிப் இதற்கு முன்னதாக லே போர்ட் பகுதியின் மேயராக திறம்பட செயல்பட்டுள்ளார். மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்வு செய்துள்ள மேக்ரானின் இந்த செயல் அரசியல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடோர்ட் பிலிப் விரைவில் பதவியேற்க இருக்கிறார். இதனையடுத்து, ஜனாதிபதி மேக்ரான் மற்றும் பிரதமராக பதவியேற்க இருக்கும் எடோர்ட் பிலிப் ஆகியோர் முதல் அயல்நாட்டு பயணமாக இந்த வாரம் ஜெர்மனி சென்று அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மார்கெல்லை சந்திக்க இருக்கின்றனர்.