Home இலங்கை மக்களையும் போராளிகளையும், அழித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள் !

மக்களையும் போராளிகளையும், அழித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – கடந்து போன 8 ஆண்டுகள் !

by admin

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

மே18, இன்றைய நாள் இலங்கையின் போர்க்குற்ற நாளாகவும் தமிழர் இனப்படுகொலை நாளாகவும், முள்ளிவாய்க்கால்நினைவுநாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. மாபெரும் அவலமாக, மாபெரும் இனப்படுகொலையாக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஈழத் தமிழ் மக்கள் சந்தித்து, இன்றுடன் எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. உலகில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக இனப்படுகொலை கருதப்படுகின்றது. ஈழத் தமிழர்களின் விடயத்தில், ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் விடயத்தில் இந்தப் பார்வைகள் மாறுபட்டடிருப்பதை இந்தக் காலகட்டம் உணர்த்துகிறது.

இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தையை முதன் முதலில் ரபேல் லேம்கின் என்பவர் 1944ல் வெளிவந்த “Axis Rule in Occupied Europe” என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார். உலகில் ஆர்மேனியன் இனப்படுகொலை – Armenian Genocide, கிரேக்க இனப்படுகொலை, பெரும் இன அழிப்பு (2ஆம் உலகப் போரில் யூதர் இனப்படுகொலை) Holodomor இனப்படுகொலை, கம்போடியா இனப்படுகொலை, Communist genocide, ருவாண்டா இனப்படுகொலை, போசுனியன் இனப்படுகொலை, குர்துமக்கள் இனப்படுகொலை, தார்ஃபூர் போர் இனப்படுகொலை போன்ற பல இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் உலகில் இறுதியாக நடந்த மாபெரும் இனப்படுகொலையையாக ஈழத் தமிழர் இனப்படுகொலையை பலரும் கருதுகின்றனர்.

இனப்படுகொலை யுத்தம் காரணமாக ஏற்படும் வடு என்பது சில வருடங்களில் இல்லாமல் போகும் ஒன்றல்ல. அது ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்துவிட்ட வடு. ஈழ மக்கள் மாத்திரமின்றி உலக மக்கள் அனைவரும் ஒரு ஒடுக்குமுறை இன அழிப்பின் கொடூரத்தை புரிந்துகொள்ளும் கறைபடிந்த கதை. மாபெரும் இனப்படுகொலை என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல லட்சம் ஈழத் தமிழர்களை காயப்படுத்தியுள்ளது. போர் வலயத்தில் நாம் சந்தித்த, பார்த்த கொடுஞ் செயல்களைவிடவும் இன்னமும் வெளிவராமல், மறைக்கப்பட்ட கொடுஞ்செயல்கள் அதிகம். இன்றுவரை இனப்படுகொலையின் கோரங்கள்வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இலக்கியமாகவும், சாட்சியமாகவும், வாக்குமூலங்களாகவும் அவை இனப்படுகொலையின் இருண்ட பக்கங்களிலிருந்து வெளிவருகின்றன.

இலங்கையில் இன ஒடுக்குதல் காரணமாக சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்தித்துள்ளனர். அவற்றுக்கான நீதியை நிலை நாட்ட மறுத்தமையின் வெளிப்படாக அதன் உச்ச நடவடிக்கையாக 2009 மே மாத்தில் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழ் இனம் மறக்க முடியாதவொரு இனப்படுகொலைக்கு முகம் கொடுத்தது. அப்படியிருக்க முள்ளவாய்க்கால் இனப்படுகொலையையும் மனிதாபிமான யுத்தம் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றும் மறைக்க நினைப்பது எத்தகைய விளைவை தரும்?

இனப்படுகொலை என்றால் என்ன? ஒரு இனத்தை முழுமையாகவோ, பகுதி பகுதியாகவோ, சமயம் மற்றும் அதன் இன வேறுபாடுகளின் நிமித்தம், தேசிய இனம் என்ற காரணங்களின் நிமித்தம் கொல்ல நினைப்பதும் அழிப்பதுமாகும். 1948 இல் ஐ நா சட்ட விதி 2 இன்படி ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதனை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக அறிவித்தது. ஆனால் அதனை பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் இந்த உலகம் தங்கியமை காரணமாக உலகத்தின் பல பகுதிகளிலும் இலங்கையிலும் இனப்படுகொலைகள் சுதந்திரமாக நிகழ்ந்ததன.

உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்துவது, கொலை செய்யதிட்டமிடுவது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும் என வரையறுக்கப்படுகிறது. இதற்கான முள்ளிவாய்க்காலின் அத்தனை சாட்சியங்களும் வாக்குமூலங்களும் காணொளிக் காட்சிகளும் உலகமெங்கும் அம்பலம் செய்யப்பட்டபோதும் தமிழர் இனப் படுகொலையை ஏற்றுக்கொள்வதில் உலகப் பொதுமன்றங்கள் பின் நிற்கின்றன.

மானுட வரலாற்றில் மனித இனம் வெட்கித் தலைகுனியும் மிகப் பெரும் இனப்படுகொலையாக ஈழத் தமிழர் இனப்படுகொலைகருதப்படுகிறது. ஆனால் உலகில் இனப்படுகொலைகள் நிகழ்கின்றபோது உலகின் பிராந்திய நலன்கள், மற்றும் அரசியல் தேவைகளின் அடிப்படையிலேயே அவை இனப்படுகொலையா இல்லையா என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த விடயத்தில் இதைப் போன்ற மானுட அவலங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஐ.நா போன்ற பொது அவைகளும் இந்த இனப்படுகொலைகளுக்குத் துணைபோகின்றன.

இலங்கையில் சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் தமிழ் மக்களை இன ஒதுக்கல் செய்கின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. இலங்கை சிங்களவர்களின் நாடு என்ற இனவாத சிந்தனையின் அடிப்படையில் இத் தீவின் பூர்வீக மக்களான ஈழத் தமிழ் மக்களை வெளியேற்றியும் கொன்றும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. 1983இல் கறுப்பு ஜூலைப் படுகொலை மூலம் இனப்படுகொலை நிகழத்தப்பட்டது. 1958, 1977 முதலிய வருடங்களிலும் ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர்

ஈழத்தில் தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றதை தொடர்ந்து போர் மூலமும் அதன் பின்னர் வான் வழியாக விமானங்கள் மூலமும் எறிகணைகளின் மூலமும் பெருமளவான மக்கள் அழிக்கப்பட்டனர். போர் வலயங்களில் அழிக்கப்படுபவர்கள் யாரால் அழிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டு பிடிக்க இயலாது என்றும் அவர்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரிலும் அப்பாவி மக்கள் வகையாக அழிக்கப்பட்டார்கள். இதேவேளை வதைமுகாங்கள் மற்றும் சிறைச்சாலைகளின் ஊடாகவும் தமிழ் மக்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பல லட்சம் மக்கள் அழிக்கப்பட்டதாக பன்னாட்டு தகவல்களும் கூறுகின்றன.

இதன் ஒரு உச்ச கட்டமாகவே முள்ளிவாய்காலில் தமிழ் மக்கள் கொன்று அழிக்கப்பட்டார்கள். இனப்படுகொலைக்கான நோக்கங்களாக தமிழர்களுக்கான சுய உரிமையை மறுக்கும் செயலே காணப்பட்டது. தமிழ் மக்களுக்கான உரிமைகளை மறுக்கவும் அவர்களை இல்லாமல் செய்யவும் அவர்களின் சொத்துக்கள், அரசியல் உரிமை, தாயகம் முதலியவற்றை அபகரிக்கவும் இன அழிப்பு நடைபெற்றது. தமிழர்களின் பிரதேசத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு தமிழ் மக்களை தமது தாய்நிலத்திலிருந்து ஒழிக்கும் செயலும் இதன் பாற்பட்டதே.

போர் வழி மாத்திரமின்றி வேறு பல வழிகளிலும் ஈழ மக்கள் அழிக்கப்படுகிறார்கள். மகிந்த ராஜபக்ச காலத்தில் வன்னியில் கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. இதேவேளை இறுதி யுத்தத்தின் பின்னர், அரசின் உயர்மட்டக் க்ட்டளைகளின் பிரகாரம், வவுனியா போன்ற மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்படைந்த தமிழ் தாய்மார்களிடம் சிங்களப் படிவங்களில் கையொப்பம் பெறப்பட்டு அவர்களின் கருக்கலை கலைக்கும் செயற்பாடுகள் நடந்துள்ளன. இது திட்டமிட்ட இன அழிப்பாகவும் ஈழத்தின் சந்ததியை கருவிலேயே அழிக்கும் செயல் என்றும் நிரூபிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் அது முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் நடைபெற்றுள்ளதாகவும் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெப்ருவரி 10, 2015 அன்று நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை மூலமாக நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானம், சட்டம் மற்றும் அரசியல் துறை சார் வல்லுனர்களின் பங்களிப்புடன் உரிய ஆதாரங்கள், தரவுகள் திரட்டப்பட்டு இயற்றப்பட்டதாக வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனது இனப்படுகொலை தீர்மான உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அரசாங்ககம், வட மாகாண சபை நிறைவேற்றிய இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாததெனக்கூறியது. அத்துடன் இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்றும் உள்நாட்டு யுத்தம் ஒன்றே நடைபெற்றதாகவும் குறிப்பிட்டது. உலக அனுபவங்களின் படி ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் தமது முன்னைய அரசால் செய்யப்பட்ட நடவடிக்கை என்பதன் காரணமாகவும் கடந்த கால இனப்படுகொலையுடன் தொடர்புடைய அரசு என்பதாலும் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு தயங்கலாம்.

மாறி மாறி ஆட்சியமைக்கும் தேசிய கட்சியை சார்ந்தவர்கள் என்ற வகையிலும் கடந்த கால ஆட்சியில் பங்கு பற்றியவர்கள் என்ற வகையிலும் தென்னிலங்கை சமூகம் என்ற வகையிலும் ஈழத் தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலைகுறித்த கூட்டுப் பொறுப்பை இலங்கை அரசு, மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியாது. ஒரு மாபெரும் இனப்படுகொலையை, உலகறியப்பட்ட மாபெரும் அநீதியை மூடி மறைப்பதும் அவ்வளவு எளிதல்ல. ஈழத் தமிழ் மக்கள் இனப்படுகொலையால் சந்தித்த காயத்தை ஆற்றுவது என்பது ஒரு இனப்படுகொலையாக அதை ஏற்றுக்கொள்வதுடன் மீண்டுமொரு இனப்படுகொலை நிகழாத வகையில் உறுதியும் நியாயமும் நிரந்தரமும் கொண்ட அரசியல் தீர்வொன்றை ஏற்படு்துவதிலேயே தங்கியுள்ளது.

அரசியல் உரிமைக்காக, ஒடுக்குமுறையை எதிர்த்து தனி நாட்டிற்காக போராடிய ஒரு இனத்தை மிக கடுமையாக அழித்துவிட்டு ஒரே நாடு ஒரே மக்கள் என்பது இனப்படுகொலையின் காயங்களை மேலும் பெரிதாக்கும் செயல்களே. ஈழத்தில், எதற்காக ஆயுதம் ஏந்தப்பட்டது? ஆயுதம் ஏந்திய போராட்டம் எவ்வாறு அழிக்கப்பட்டது? அழிக்கப்பட்டவர்களின் நெஞ்சில் என்ன கனவு இருந்தது? எஞ்சியிருப்பவர்களின் நெஞ்சில் என்ன கனவு இருக்கிறது? அரசியல் உரிமைக்காக போராடிய ஒரு இனத்தை மாபெரும் இனப்படுகொலை மூலம் அழித்து அடக்கி ஒடுக்குவது எத்தகைய அணுகுமுறை? ஒடுக்குமுறைக்காக போராடிய இனத்தை இன மேலாதிக்கத்தால் அழித்தொழிப்பது என்பது எத்தகைய இன அழிப்பு?

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More