பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது என ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ள அவர் மிகவும் நியாயமான கோரிக்கை ஒன்றுக்காக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டம் நடத்தியதாகவும் அவர்கள் பாதுகாப்பு தரப்புடன் மோதவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் இந்த மாணவர்களை குற்றவாளிகளை போன்று நடத்தியதாகவும், மனிதாபிமானமற்ற வகையில் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்த தாக்குதல் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ள 20 மாணவர்களையும் நிபந்தனையின்றி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமெனவும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியுடன் எவ்வித தனிப்பட்ட குரோதமும் கிடையாது எனவும், கல்வி தனியாரின் கைகளில் செல்லக்கூடாது என்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.