புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் மூன்று மேல் நீதிபதிகள் முன்னிலையில் ‘ ட்ரயலட்பார்’ தீர்ப்பாய முறைமையில் மிகவிரைவில் நடைபெறவுள்ளது. குறித்த வழக்கினை விசாரணை செய்வதற்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதம நீதியரசர் நியமித்து உள்ளார்.
குறித்த வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் கடந்த 12ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவை தற்போது மேல் நீதிமன்றில் இரும்பு பொட்டகத்தில் வைக்கப்பட்டு பாதுக்கக்கபப்ட்டு வருகின்றது.
குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன அதனை அடுத்து இந்த வழக்கினை யாழ்ப்பாணத்தில் நடாத்த வேண்டும் என மாணவியின் தாயார் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதேவேளை குறித்த வழக்கு யாழ்ப்பணத்தில் நடைபெற வேண்டும் என கோரி யாழில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.