கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழ் இயங்குகின்ற பல முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகளில் சிவில் பாதுகாப்பு பிரிவின் சின்னம் பொறிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக முதற்கட்டமாக கிராமங்களில் உள்ள முன்பள்ளிகளிலேயே இவ்வாறு சிவில் பாதுகாப்பு பிரிவின் சின்னம் பொறிக்கப்பட்ட சீரூடைகள் சிறார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து சிறுதொகை பணமும் அறவிடப்பட்டுள்ளது என பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சீரூடைகளில் சிஎஸ்டி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வழங்கப்பட்டமையினால் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதனை தொடர்ந்து அவை நிறுத்தப்பட்டு தற்போது சின்னம் பொறிக்கப்பட்ட சீரூடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 163 முன்பள்ளிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 97 முன் பள்ளிகளும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 06 முன்பள்ளிகளும் காணப்படுகின்றன. இதில் 503 ஆசிரியர்களும், 5840 முன்பள்ளி மாணவர்களும் உள்ளனர்.
இங்கு கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சம்பளத்தில் சிவில் பாதுகாப்பு படையாளி எனும் பதவி நிலையில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.