மான்செஸ்டர் குண்டு வெடிப்புக்கு காரணமான தற்கொலைதாரி அபேதியின் தந்தை மற்றும் சகோதர் ஹசீம் அபேதி ஆகியோரை லிபிய காவல் துறையினர் கைது செய்துள்னர். இந்த தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதி கைது செய்துள்ளதாகவும், விசாரணைக்கு பின்னர் மற்ற தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும் பொலீசார் தெரிவித்தனர்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் தாக்குதலுக்கு தாமே காரணம் என டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் இயக்கத்தினர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தற்கொலைப்படை தீவிரவாதியின் பெயரையும் பொலீசார் உறுதிசெய்துள்ளனர்.
லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்த 22 வயதான சல்மான் அபேதி என்பவர் இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதே தகவல்களை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்தனர். இந்த நிலையில் இவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மான்செஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது:-
மான்செஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மான்செஸ்டர் தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் சல்மான் அபேடி (Salman Abedi) தனியாக செயற்பட்டாரா அல்லது அவருடன் சிலர் இணைந்திருந்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சல்மான் அபேடியின் 23 வயதான சகோதரரையும் பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகவும் அதிகரித்துள்ளதாகவும் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து முக்கிய இடங்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.