அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கூட்டுறவை விரிவுபடுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று (25) கென்பராவில் உள்ள அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இரு தலைவர்களுக்குமிடையிலான தனிப்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இப்பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்புகளில் இருந்தும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் முன்னிலையில் பின்வரும் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டுறவை மேம்படுத்துவது தொடர்பான இணைந்த பிரகடனத்தில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Julie Bishop மற்றும் இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ த சில்வா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
சிறுநீரக நோய்த்தவிர்ப்பு தொடர்பான கூட்டுறவு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அவுஸ்திரேலிய அணு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இலங்கையின் சிறுநீரக நோய் தவிaர்ப்பு ஜனாதிபதி செயலணிக்குமிடையே அவுஸ்திரேலிய அணு விஞ்ஞான, தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி Adrian Pateson மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இலங்கை சுரங்கப் பணியகத்திற்கும் அவுஸ்திரேலிய மண்ணியல் ஆய்வு நிலையத்திற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் உயர் ஸ்தானிகர் ஸ்கந்தகுமார் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ வரவேற்பு அரச மாளிகையில் இன்று காலை இடம்பெற்றது ஜனாதிபதியை ஆளுநர் நாயகம் சேர் பீற்றர் குரொஸ்குரோ வரவேற்றார். ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டதுடன் இரு நாடுகளினதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது