வலுசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வலுசக்தியைப் பேணுவதற்காக நிலையான திட்டத்துக்கு இலங்கைக்கு உதவுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புலல்லுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (25) முற்பகல் அவுஸ்திரேலிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போதே அவுஸ்திரேலிய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் , இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர், அதற்காக துரித திட்டத்தை அமுல்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.
அத்துடன் இலங்கையின் கனிய வளங்கள் தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்காக அவுஸ்திரேலியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்க முடியுமெனவும் தெரிவித்த அவர், இலங்கையின் விவசாயத்துறைக்காக அவுஸ்திரேலியாவின் தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அறிவை வழங்கும் செயற்திட்டத்தை தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்புக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர், அந்த ஒத்துழைப்பை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி இ;, கடல் வழியாக ,லங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதனை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவுஸ்திரேலிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்பூல் அத்திட்டம் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
இலங்கையின் சிறுநீரக நோய்த் தடுப்புக்காக முன்னெடுக்கப்படும் திட்டத்துக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பை வழங்கி, அதற்கு தேவையான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞான தொழிநுட்ப அமைப்பின் ஒத்துழைப்பை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்து அதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது.