புளத்சிங்கள மண்சரிவில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
புளத்சிங்கள போகாவத்த மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் சடலங்கள் பிம்புர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.கே. சேனாதீர தெரிவித்துள்ளார். பத்து கிராமங்களுக்கு மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை வழங்க விமானப் படையினரின் உதவி நாடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது:-
நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண் சரியக்கூடிய இடங்களிலிருந்து மக்கள் வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.