நாட்டின் எட்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலைமை அறிவிக்க்பபட்டுள்ளது. தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அதிக மழை காரணமாக இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணி நேரம் அமுலாகும் வகையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, கண்டி, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அல்லது மண்மேடுகள் சரிந்து செல்லும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன், மரங்கள் அல்லது தூண்கள் இயல்பாக இடம்பெயர்தல், கட்டிடங்கள் அல்லது சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்படுதல் போன்ற வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.