இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஒரு பொல்லாப்பும் இல்லை! ஈழச் சித்திர் யோகர் சுவாமிகளின் அவதார தினம் இன்று!

ஈழத்தின்  சைவத் துறவியும் திருக்கயிலாய பரம்பரையில் நந்திநாத சம்பிரதாயத்தில் வந்த குருபரம்பரையின் 161ஆவது சற்குருவுமான சிவயோக சுவாமிகளின் அவதார தினம் இன்றாகும். இவர் 1872 மே 29 ஆம் திகதி பிறந்தார்.

யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில், அம்பலவாணர் – சின்னாச்சியம்மை தம்பதிக்கு, மே 29 1872இல் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இளம்வயதிலேயே தாய் இறந்துவிட, தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையாரால் வளர்க்கப்பட்டார்.

கொழும்புத்துறையில் அந்நாளில் இருந்த ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் மேற்படிப்பும் கற்றார். கல்வி முடிந்ததும் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராகப் பணியில் இணைந்து, கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.

1905இல் நல்லூர்த் தேரடியில், முதன்முதலாக செல்லப்பா சுவாமியைக் கண்ட நாளிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது. சதாசிவத்தை ஆழமான கண்களால் ஊடுருவி, “யாரடா நீ ?” என்று கேட்டு, “ஒரு பொல்லாப்பும் இல்லை!” என்ற வார்த்தைகளை செல்லப்பா சுவாமிகள் உதிர்த்த கணம், சதாசிவத்தின் மனம் லௌகிக வாழ்க்கையை உதறியதாகச் சொல்லப்படுகின்றது.

பின் ஐந்து ஆண்டுகள் அவரிடம் சீடனாக வாழ்ந்த சதாசிவம், செல்லப்பரால் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு அனுப்பப்பட, கொழும்புத்துறையில் ஒரு இலுப்பை மரத்தடியில் அவர் யோகசாதனைகளில் திளைத்ததாகச் சொல்லப்படுகின்றது. செல்லப்பா சுவாமிகள் சமாதியடையச் சில நாள் முன்வரை, யோகர் சுவாமிகள் அவரை மீண்டும் சந்திக்கவில்லை.

பின் அங்கேயே ஆச்சிரமமொன்றமைத்த அவர், இலங்கையெங்கணும் யாத்திரை செல்வதும், நற்சிந்தனைகளை வழங்குவதுமாக இருந்தார். 1940இல் இந்தியப் பயணம் மேற்கொண்ட அவர், திருவண்ணாமலையில் இரமண முனிவரையும் சந்தித்தார். 1934 டிசம்பரில், அவரால் துவக்கப்பட்ட சிவதொண்டன் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.

மார்ச் 1964ஆம் ஆண்டு  மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் திருவடிக்கலப்புற்றார்.

செல்லப்ப தேசிகர் யோகசுவாமிகளுக்குக் ஞானத்தைப் போதிக்கும் வகையில் அருளிய மாணிக்கமணியனைய வார்த்தைகளை யோகசுவாமிகளும் தன் பக்தர்களுக்கும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார். மேலும் இவற்றை தன்னுடைய நற்சிந்தனையிலும் பரவலாக விரவி வைத்தார். யோகசுவாமியின் அடியார்களால் “மகாவாக்கியங்கள்” என்று கூறப்படும் அவை வருமாறு:

எப்பவோ முடிந்த காரியம்
நாம் அறியோம்
ஒரு பொல்லாப்பும் இல்லை
முழுதும் உண்மை

யோகர் சுவாமிகள் பாடிய பாடல்கள், கவிதைகள், அருண்மொழிகள் என்பன, அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள்,சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்போரால் தொகுக்கப்பட்டு, தமிழில் “நற்சிந்தனை” எனும் நூலாகவும், ஆங்கிலத்தில் “The Words of Our Master” என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன.

யோகர் சுவாமிகளின் நேரடிச் சீடர்களாக, மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமிகள் ஆகியோர் சொல்லப்படுகின்றனர். இவர்களில் சந்தசுவாமி, இலங்கையின் கடைசி ஆங்கிலேய ஆளுநர் சோல்பரி பிரபுவின் மகன் ஆவார். ஹவாய் சைவ ஆதீனத்தில் 162ஆவது நந்திநாத பரம்பரை சற்குருவாக அமர்ந்திருந்த சிவாய சுப்ரமணியசுவாமியும் யோகர் சுவாமிகளது சீடரே! இவர்களைவிட, கௌரிபாலா (யேர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலியா) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் ஆவர்.

தகவல்கள் – விக்கிபீடியா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link