வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் நேற்று (28-05-2016) வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அத்தோடு வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் சவால்கள் குறித்தும் ஆராயும் மாநாடும் இடம்பெற்றது.
காலை ஒன்பது மணிக்கு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்ற மாநட்டினை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் இடம்பெற்றது.
இதன் போது பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்.பி. நடராஜா
இந்த அமைப்பு ஒரு அரசியல் கட்சி அல்ல, ஆனால் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் நலன்சார்ந்து அரசியல் ரீதியாக தீர்மானங்களை மேற்கொள்கின்ற அமைப்பாக செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்களின் நல்னகளையும், அவர்களின் உரிமைகளையும் பேணுகின்ற அதேவேளை அவர்களுக்கு மீது காட்டப்படுகின்ற பாரபட்சங்கள், ஓரங்கட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே செயற்பாடுகளை முன்னெடுக்கும்,
தமிழ்த்தேசியத்தோடு பயணிக்கின்ற எமது அமைப்பு தமிழ் மக்கள் பிரதேச, வேறுபாடுகளை கடந்து தமிழ் பேசுகின்ற மக்கள் என்ற எனும் அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, அரசியலிலும் வடக்கு கிழக்கு மலையக மக்கள சார்ந்து தீர்மானங்களை மேற்கொள்கின்ற அமைப்பாகவும் செயற்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மலையக மக்களின் பிரதிநிதிகள் நுற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.