பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக சிரேஸ்ட தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கில் அத்வானி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது நடவடிக்கையை தவிர்க்க ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இதையேற்ற நீதிமன்றம் இவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.
தலா 50,000 ரூபா பிணைத்தொகையின் பேரில் இவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் இவர்கள் கைது செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகின்றனர்!
May 30, 2017 @ 03:17
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் இன்று முன்னிலையாகின்றனர். பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளன. பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. வழக்கு விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்காக, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகின்றனர்.
ரேபரேலி, லக்னோ நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்ததை ஒரே வழக்காக மாற்றி, லக்னோ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கை, லக்னோ சிறப்பு நீதிமன்றம், தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் மீது இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதால், அவர்கள் 3 பேரும் இன்று 30-ம் திகதி ஆஜராக வேண்டும் என்றும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் இனறு நீதிமன்றத்தில் முன்னிலையாகின்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.