காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres) தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு எதிராக சவால்களை வெற்றிகொள்ள சர்வதேசம் இணைந்து செயற்பட வேண்டியது இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ள அவர் 2015ம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை தொடர்பில் ஏதேனும் ஓர் நாடு இணங்கவில்லை என்றாலும், அனைத்து நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கூறியுள்ள நிலையில், அன்ரனியோ குட்டாரஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் முதல் தடவையாக காலநிலை மாற்றம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் விரைவில் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும், பாரிஸ் உடன்படிக்கை அவசியமானது எனவும் அன்ரனியோ குட்டாரஸ் நியூயோர்க்கில் வைத்து தெரிவித்துள்ளார்.