மூன்று வேறு வேறு கொலைக் குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஐந்து பேருக்கு வவனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளார். இந்த மரண தண்டனை தீர்ப்புக்கள் வியாழக்கிழமை ஜுன் மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றவாளிகளாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பெண்ணாவார்..
மூன்றுமுறிப்பு வழக்கு
வவுனியா மூன்றுமுறிப்பைச் சேர்ந்த ஐஸ்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பிரபல வர்த்தகராகிய நிலமே ஆராச்சிகே தர்மகீர்த்தி என்பவரை, உறங்கும்போது, அவர் உறங்கிய அறைக்குத் தீமூட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கொல்லப்பட்டவருடைய மனைவியாகிய ஜயக்கொடி ஆராச்சிலாகே ரோகிணி தமயந்தி
என்ற பெண்ணே இவ்வாறு குற்றவாளியாகக் காணப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சுந்தரபுரம் சுகந்தன் கொலை வழக்கு
வவுனியா சுந்தரபுரத்தில் கந்தசாமி சுகந்தன் என்பவரை கொலை செய்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுந்தரபுரத்தைச் சேர்ந்த குட்டப்பன் வேலாயுதம் அவருடைய புதல்வர்களான வேலாயுதம் தினேஸ்குமார், வேலாயுதம் மனோராஜ் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவருடைய இரண்டு மகன்மார்களுமே இவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளாகியவர்களாவர்.
கந்தசாமி சுகந்தன் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்த மூவரையும் குற்றவாளிகளாகக் கண்ட நீதிமன்றம் அவர்களுக்கு இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
சாஸ்திரி கூழாங்குளம் இந்துமதி கொலை வழக்கு
வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து தங்கநகைகளைக் கொள்ளையடித்ததுடன் 19 வயதான சிவகுமார் இந்துமதி என்பவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட விஸ்வநாதன் கனகமனோகரன் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
மூன்று வழக்குகளிலும் இந்த கொலைக்குற்றத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன. நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த அனைவரும் எழுந்து நின்றனர். நீதிபதியும் தமது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று மரண தண்டனை தீர்ப்புக்களை வாசித்தார்.