கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 80 வயதான கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். 1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.
தமிழ்த்துறை தலைவர்
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். கவிதைகள், கட்டுரைகள் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் தமது பால்வீதி கவிதை தொகுப்பில் தொடங்கி பித்தன் வரை பல்வேறு நூல்களை தமிழ் இலக்கிய உலக்கிற்கு கொடுத்துள்ளார்.
இவரது தந்தை உருதுக் கவிஞர். இவரது தாத்தா உருது, பாரசீக மொழிகளில் கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர். அதனால், இயல்பிலேயே இவரும் கவிதை எழுதும் திறன் கொண்டிருந்தார்.
தமிழில் உயர்கல்வி பயின்ற போது ஆங்கில இலக்கியம் மீதும் நேசம் பிறந்தது. கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதையில் மனம் கவரப்பட்டார். கல்லூரியில் நடக்கும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் இவருக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். முதுகலைக் கல்வி பயிலும்போது, மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளைப் படித்தார். அவர்களைப் போலவே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே எழுதவும் தொடங்கினார்.
தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதமும் கற்றார். எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர் வரை சென்று ஆழக் கற்பது இவரது இயல்பு.
ஆறாவது விரல்
தமக்கு உயிரும் வாழ்க்கையுமே கவிதைதான் என்று சொன்னவர் அப்துல் ரகுமான். எழுதுகோலைத் தம் கையின் ஆறாவது விரலாகவே உணர்கிறார். ‘இந்த ஆறாவது விரல் வழியே வடியும் இரத்தமும் சதையும்தாம் தம் எழுத்துகள்’ என்று சொன்னவர்.
என் ஆறாவது விரல் வழியே
சிலுவையிலிருந்து
வடிகிறது ரத்தம்
ஆம் –
என் ‘மாம்சம்’
வார்த்தை ஆகிறது என்றவர்.
சுவையான பால்வீதி – 1974ல் இவரது முதல் கவிதை தொகுப்பான ‘பால்வீதி’ வெளிவந்தது. பாலைச் சுண்டக் காய்ச்சித் திரட்டாகக் கட்டி ஆக்கியது போன்று, சிந்தனையையும் கற்பனையையும் திரட்டி வடித்த புதுக்கவிதைகள் கொண்டது பால்வீதி.
நேயர் விருப்பம் – அடுத்து வெளிவந்தது, கவியரங்கங்களில் அவர் பல ஆண்டுகளாகப் படைத்த கவிதைகளுள் தெரிந்தெடுத்த சிலவற்றையும், இந்தி உருது இசைப்பாடல் வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திப் படைத்த பாடல்களையும் கொண்ட நேயர் விருப்பம். இது 1978ஆம் ஆண்டில் வெளிவந்தது.
புதுக்கவிதை தொகுதிகள்:-
அதைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு சுட்டுவிரல் என்ற நூல் வெளியானது. இந்த நூலில் சமுதாயச் சீரழிவுகளுக்குக் காரணமானவர்கள் அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். சினம் கொண்டு சாடியுள்ளார்.
ஆலாபனை:-
1995 ஆம் ஆண்டு ஆலாபனை வெளியானது. 1998ல் விதைபோல் விழுந்தவன் நூலும், 1998ல் முத்தமிழின் முகவரி, பித்தன் ஆகிய புதுக்கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இலக்கியத்திற்கு மரியாதை:-
இவரது ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், வெகுகாலமாக தமிழ்க் கவிதைக்கு வழங்கப்படாமல் இருந்த இந்த விருதை தமிழுக்குப் பெற்றுத் தந்தார்.
காதல் இலக்கியம்:
2002 ஆம் ஆண்டு மின்மினிகளால் ஒரு கடிதம் என்னும் நூல் வெளிவந்துள்ளது. இது அரபி, உருது மொழிகளின் கஸல் என்னும் காதல் கவிதை வடிவத்தைத் தமிழில் அறிமுகம் செய்ய இவர் படைத்த அழகிய காதல் இலக்கியம். ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் பிரதிபலிக்கும். இலக்கிய கட்டுரைகள் இக்கவிதை நூல்கள் மட்டுமின்றி இரு ஆராய்ச்சி நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரை நூல்கள், பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து விளக்கி எழுதிய பல கட்டுரைத் தொகுதிகள் என்று பல நூல்களைப் படைத்து வெளியிட்டுள்ளார். தத்துவ கவிதைகள் ‘திராவிட நாடு’, ‘திராவிடன்’, ‘முரசொலி’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘மன்றம்’, ‘விகடன்’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது தொடர் கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்தன. இலக்கியத்தின் பல களங்களில் முத்திரை பதித்தாலும், ஒரு கவிஞராகவே இவர் புகழ்பெற்றார். இவரது தத்துவக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
கடைசி வரை சினிமா பாடல்களை எழுத மாட்டேன் என தீர்க்கமாய் இருந்த கவிக்கோ!
பல்வேறு விருதுகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக்காரரான கவிக்கோ அப்துல்ரஹ்மான் கடைசி வரை சினிமாவுக்கு பாடல்களை எழுதமாட்டேன் என தீர்க்கமாய் இருந்தவர் ஆவர். சினிமாவுக்கு பாட்டில்லை பல்வேறு படைப்புகளுக்கு சொந்தக்காரரான கவிக்கோ அப்துல் ரஹ்மான் சினிமாவுக்கு பாடல்களை எழுத மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக கவிக்கோ சினிமாவில் இடம் பெறும் குத்துப்பாட்டுகளை விரும்பியதில்லை. சினிமா குத்துப்பாடல்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிக்கோ பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம். குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம் என்றார்.