இலங்கையில் சிறுபான்மை இனங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது.
இத்தகைய செயல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தை மாத்திரமன்றி நாட்டின் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் காவல்துறைமா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, பல சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமையை சுட்டிக்காட்டியுள்ள இலங்;கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.