Home இலங்கை தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரனை நினைவுகூர்வதன் அவசியம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

by admin
இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன்.
இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன். சிவகுாமரன் பிறந்தார். பொன்னுத்துரை, அன்னலட்சுமி இவரது பெற்றோர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவனாக இவர் கல்வி பயின்றார். அக் காலத்தில் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இது சிவகுாமரனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாணவனாய் தன்னுடைய மாணவ சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டு தாம் ஒடுக்கப்பட்டபோது சிவகுமாரன் போராடத் துணிந்தார். கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் அவர் தன்னையும் இணைத்தார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தாக்குதலையும் பொன். சிவகுமாரனே நடத்தினார். கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்டசிறிமா ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பிடித்த யாழ் நகரத் தந்தை அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் சிவகுமாரன் குண்டு பொருத்தினார். எனினும் துரையப்பா வருவதற்கு முன்பாகவே அந்தக் குண்டு வெடித்தமையால் அதிலிருந்து அவர் தப்பினார். பின்னர் துரையப்பா கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரன் தனித் தாக்குதல் முயற்சிகளுடன் உண்ணாவிரதப் போராடட்டம் போன்றவற்றில் தன்னை இணைத்தார். இளைஞர் பேரவையின் உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1970களில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசில் அமைச்சரவையில் இடம்பெற்ற சோமவீர சந்திரசிறியின் வாகனத்திற்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் தமிழரராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரனிடத்தில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. படுகொலைகளை நடத்திய சந்திரசிறியை கொலை செய்ய வேண்டும் என்று சிவகுமாரன் வெளிப்படையாக கூறும் நிலையை அடையுமளவில் சினத்திற்குள்ளானார். இதனால் சிவகுமாரன் தேடப்படும் நபரானார். கோப்பாயில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட சிவகுமாரன் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்துக்கொண்டார். ஜூன் 05, 1974இல் தன்னுடைய 24ஆவது வயதில் தன்னை மாய்த்த சிவகுமாரனின் 42ஆவது நினைவுதினம் இன்றாகும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர்நீத்தவர் சிவகுமாரனே. இவரே ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் என்றும் முக்கியம் பெறுகிறார். தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இலங்கை அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடும் வல்லமையை இளைஞர்களிடத்தில் சிவகுமாரன் ஏற்படுத்தினார். இவரது மரண நிகழ்வின்போது முதன் முதலில் பெண்கள் சுடலைக்கு வருகை தந்த மாற்றமும் இடம்பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சிவகுமாரனின் மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் ஈழத் தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கப்பட்டபோதும் சிவகுமாரன் போராட்டத்தை கையில் எடுத்தார். இலங்கை அரசியலில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட கல்வித் தரப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தமிழ் மிதவாத தலைமைகளால் எதுவும் செய்ய முடியாதபோது சிவகுமாரன் அகிம்சைப் பாதையிலிருந்து விலகி ஆயுதப் பாதையில் சென்றார். தமிழ் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை ஆளும் சிங்களத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஒடுக்குமுறையை ஈழ மக்களிடத்தில் பிரயோகித்த போது சிவகுமாரன் ஆயுதப் பாதையை கையில் எடுத்தார்.
சிவகுமாரனின் வாழ்வையும் மரணத்தையும் கையில் எடுத்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. சாதாரணமாக எல்லா மாணவர்களையும் போல தன் படிப்பில் மாத்திரம் அவன் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவன் எல்லா மாணவர்களின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். அவன் எல்லா மாணவர்களின் நலனினும் கவனம் செலுத்தினான். அவன் ஈழ மக்களின் நலனின் கவனம் செலுத்தினான். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காது, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கியபோது சிவகுமாரன் இப்படியான போராட்டம் ஒன்றே தேவை என உணர்ந்தான்.
தனி ஒருவனாய் சிவகுமாரன் முன்னெடுத்த போராட்டமே பின்னர் ஈழவிடுதலை ஆயுதப் போராட்டமாக விரிந்தது. சிவகுமாரன் ஏன் ஆயுதத்தை கையில் எடுத்தான் என்பதையும் அவன் எப்படியான காலத்தில் தன் தாக்குதல்களை நடத்தினான் என்பதையும் இன்றைய நாளில் ஆராய்வது மிகவும் அவசியமானது. சிவகுமாரனின் தனி மனித போராட்ட சரித்திரம் நினைவுகூரவும் மதிப்பிடவும் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒன்றாகும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More