காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அலுவலகம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவது குறித்து எதிர்வரும் 22ஆம் திகதி பாராளுமன்றில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது
நேற்றையதினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, காணாமல் போனோர் தொடர்பாக அலுவலகம் நிறுவப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கும் பொறிமுறையின் ஒரு அம்சமான காணாமல் போனோர் தொடர்பான அலுவகத்தை அமைப்பது குறித்த சட்டவரைபு, கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
எனினும் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணி விடுத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், சட்டத்திருத்தம் தொடர்பில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.