280
சிறுபான்மையினர் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டுமொரு இனவழிப்பு அல்லது மதவழிப்புக்கு வழிவகுக்கும் அபாயம் உண்டு. எனவே உடனடியாக அதனை தடுத்து நிறுத்த ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வடமாகாண சபையின் 94ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் மொழிந்தார். அதனை எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயதிலக வழி மொழிந்தார்.
பிரேரணையை முன் மொழிந்து சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கும் போது , இலங்கையில் எண்ணிக்கையில் குறைந்த இனம் மற்றும் மதத்தை சார்ந்தவர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அதனால் சிங்கள கிறிஸ்தவ மக்கள் கூட பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இன மற்றும் மத அழிப்புக்கு வழிவகுக்கும். அவ்வாறு ஏற்படாது தடுக்க உடனடியாக விரைந்து ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும். என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த பிரேரணை ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
Spread the love