177
வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றத்திற்காக வடமாகாண சபையில் எதிர்வரும் 14ஆம் திகதி விசேட அமர்வு நடைபெறவுள்ளது.
நேரடி ஒளிபரப்புக்கு தடை.
குறித்த அமர்வில் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தடை விதித்துள்ளார். அத்துடன் அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை வைத்துக்கொண்டு அவர்களை குற்றவாளிகள் எனும் விதமாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கு தடை விதிப்பது நல்லது.
அன்றைய அமர்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பது நல்லது.ஏனெனில் அண்மைக்காலமாக ஊடகங்கள் இல்லாத பொல்லாத செய்திகளை திரிவுபடுத்தி வெளியிட்டு வருகின்றது. அதனால் ஊடகவியலாளர்களுக்கு அன்றைய அமர்வில் செய்தி சேகரிக்க அனுமதி வழங்காது விடுவது நல்லது என முதலமைச்சர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்க தேவையில்லை.
அறிக்கை வெளிவந்தது உறுப்பினர்கள் எமக்கு கிடைக்க முதலே ஊடகங்களுக்கு கிடைத்து விட்டன. எனவே ஊடகவியாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயதிலக தெரிவித்தார்.
ஆட்சி மாறியதால் காட்சி மாறியது.
மத்தியில் ஆட்சி மாறிய பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் காட்சிகள் மாறிய பின்னர் தான் ஆளும் கட்சியே அமைச்சர்கள் மீது குற்றசாட்டை முன் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரினார்கள். நாம் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்து பல தடவைகள் குற்ற சாட்டுக்களை முன் வைத்த போது அதனை ஏற்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் வை. தவநாதன் தெரிவித்தார்.
வெளிப்படைத்தன்மை வேண்டும்.
அறிக்கை தொடர்பில் வெளிப்படைத்தன்மை வேண்டும். அதனை விசேட அமர்வு நடாத்தி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாக கூற சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதனை விடுத்து அறிக்கை தொடர்பில் மூடிய அறைக்குள் முடிவெடுக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார்
ஆடு நனையுது என ஓநாய் கவலைப்பட்டது.
ஆடு நனையுது என ஓநாய் கவலைப்பட்டது போல உள்ளது எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கள். ஊடக சுதந்திரம் தொடர்பிலும் ஜனநாயகம் தொடர்பிலும் அவர் பேசுகின்றார். தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அவர்கள் ஆளும் கட்சியாக இருந்து இருந்தால் ஊடக சுதந்திரம் ஜனநாயகம் எந்த நிலையில் இருந்திருக்கும் ? என எண்ணி பார்க்கிறேன். என ஆளும் கட்சி உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.
12ஆம் திகதி பொங்கல் , 13 இராசி இல்லை. 14ஆம் திகதி நடாத்துவோம்.
அறிக்கை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான அமர்வினை நடாத்துவதற்கு 12ஆம் திகதி அனைவருக்கும் சாத்தியமா என அவைத்தலைவர் கேட்ட போது , ஆளும் கட்சி உறுப்பினர் லிங்கநாதன் 12ஆம் திகதி வற்றாப்பளை அம்மன் ஆலய வருடாந்திர பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது என தெரிவித்தார். அப்போ 13ஆம் திகதி என அவைத்தலைவர் கேட்ட போது 13 இராசி இல்லை. அந்த திகதி வேண்டாம் என ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்ததை அடுத்து 14ஆம் திகதி அனைத்து உறுப்பினர்களுக்கும் சாத்தியமான திகதி என்பதனால் 14ஆம் திகதி சபை அமர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
Spread the love