Home இலங்கை விசாரணை குழுவின் அறிக்கை அந்தரங்கமானது. ஊரறிய கூறுவது மாகாண சபைக்கு இழுக்கு. – சி.வி.

விசாரணை குழுவின் அறிக்கை அந்தரங்கமானது. ஊரறிய கூறுவது மாகாண சபைக்கு இழுக்கு. – சி.வி.

by admin


வடமாகாண சபை உறுப்பினர்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அறிக்கையின் பிரதியை சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் 95 வது அமர்வு மாகாணப் பேரவைச் செயலக சபா மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. அதன் போது விசாரணை குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எமது அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்ததன் விளைவாக நாம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தோம். அதில் இருவர் ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவர் இளைப்பாறிய இலங்கை நிர்வாக சேவையின் ஒரு சிரேஸ்ட அதிகாரியாவார். விதிமுறைக் குறிப்புக்கள் கொடுக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் மூடிய அறையில் விசாரணைகள் நடைபெற்றன.

ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்படாது என்ற நிபந்தனையின் பேரில் விசாரணைகள் நடைபெற்றன. தற்போது அவர்களின் அறிக்கை பெறப்பட்டுள்ளது.

மீன்பிடி, போக்குவரத்து ,வர்த்தக, வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களும் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களும், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர், விவகார அமைச்சருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்களும் விவசாய கமநலசேவை, கால்நடை அபிவிருத்தி, நீர்வழங்கல், உணவு வழங்கல் விநியோகித்தல், சுற்றாடல் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களும் கிடைக்கப்பெற்றன.

நான்கு அமைச்சர்களும் குழுவின் அதிகாரத்தை ஏற்று சாட்சியமளித்துள்ளார்கள். சாட்சியமளிக்க அவர்கள் பின்நிற்கவில்லை. குறித்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான அறிக்கையை இச் சபை முன் சமர்ப்பிக்க முன் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்வது நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

விசாரணைக்குழு அங்கத்தவர்கள் வடமாகாணசபையின் நடவடிக்கைகள் பற்றியும் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் அவர்கள் கருத்துப்படி எமக்கிருக்கும் மிகக் குறுகிய அதிகாரங்கள் பற்றியும் ஆளுநரின் அதிகாரங்கள் பற்றியும் பல்வேறு கருத்துக்களைத் தம் அறிக்கையில் முன் வைத்துள்ளார்கள். அவை எம்மால் பரிசீலிக்கப்பட வேண்டியவை.

முறைப்பாட்டாளர்கள் வராததால் சில அமைச்சர்கள் பேரிலான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக சாட்சியம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். மற்றையவர்கள் சம்பந்தமான தவறுகள் பல எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு அதிகாரத் துஸ்பிரயோகம் பற்றிக் கூறியுள்ளார்கள். பணவிரயம் பற்றிக் கூறியுள்ளார்கள். அதிகார வரம்பை மீறியுள்ளதாகக் கூறியுள்ளார்கள். மேலும் பல தவறுகள் பற்றிக் கூறியுள்ளார்கள்.

பொதுவாகக் குற்றச்சாட்டுக்கள் எமது உறுப்பினர்களாலேயே முன் வைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் நால்வரான அமைச்சர்கள் மீது மற்றைய சில உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி அவை சம்பந்தமாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விதப்புரைகளையும் விசாரணைக் குழுவினர் தந்துள்ளார்கள். அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி நானே தீர்மானிக்க வேண்டும். எனினும் நான் தீர்மானிக்க முன் சபையினரின் கருத்தை அறிய ஆவலாய் இருக்கின்றேன்.

அத்துடன் அறிக்கையில் இருப்பவை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் சபையில் விளக்கமளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப்படுகின்றேன். ஏனென்றால் சில விடயங்கள் விசாரணைக் குழுவினால் கவனத்திற்கு எடுக்கப்படவில்லையென்றோ தவறான முடிவுக்கு அவர்கள் வந்து விட்டார்கள் என்றோ பாதிக்கப்பட்டவர்களால் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாங்கள் ஈடுபட்டுள்ள இந்தச் செயல்முறை பொது வாழ்வில் உள்ளவர்கள் வெளிப்படைத்தன்மைக்கும் பொறுப்புக்கூறலுக்குந் தம்மை முன்னிறுத்த முன்வரவேண்டும் என்ற கருத்தை முன்னிலைப் படுத்துவதாக அமைந்துள்ளது.

மக்கள் எம்மைத் தேர்ந்தெடுக்கும் போது எங்கள் மீது அவர்களுக்கு பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. நேர்மையான, ஊழலற்ற, பக்கசார்பற்ற, கண்ணியமான ஒரு நிர்வாகத்தை நாம் அவர்களுக்குக் கொடுப்போம் என்ற எதிர்பார்ப்பே அது.

புதிய ஒரு அமைப்பான வடக்கு மாகாணசபையைக் கையேற்றபோது நாம் ஒரு நம்பிக்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். ஆகவே நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்ற முறையில் நேர்மை, பக்கசார்பற்ற தன்மை, பொறுப்புக் கூறல், பொறுப்பாக நடந்து கொள்ளல் மற்றும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது போன்ற குணாதிசயங்களை மக்கள் எங்களிடம் எதிர்பார்த்துள்ளார்கள்.

அந்த நம்பிக்கையை நாங்கள் மழுங்கடிக்கும் வண்ணம் நடந்து கொள்ளக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தவே மேற்படி விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. எம்மிடம் குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்யவே இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. எம்மை நாமே ஒழுக்கப்படுத்த அல்லது எமது நடவடிக்கைகளை மீளாய்வு செய்ய இந்த வழிமுறை உதவியது.

மத்திய அரசாங்கமும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் தமது நிர்வாகத்தில் உள்ளடக்குவதாகவே கூறி பதவிக்கு வந்தது. அந்த வகையில் எங்கள் வடமாகாணம் வேறெந்த குறைகள் இருப்பினும் அடிப்படை விடயங்களில் சறுக்கிவிடக் கூடாது. அதிகாரத்துஸ்பிரயோகம், பணவிரயம், அதிகார வரம்புமீறல், பக்கசார்பான நடவடிக்கைகள் போன்றவை எமது நிர்வாகத்தைக் கேள்விக் குறியாக்கி விடுவன.

நாம் எமது குறைபாடுகளை சீர்செய்ய வேண்டும். ஆனால் அதே நேரம் விசாரணைக்குழுவின் அறிக்கையில் முன்கூறியவாறு பல குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நான் வருகைதராத ஒரு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான பல விடயங்கள் சம்பந்தமாக எமது அமைச்சர்கள் கேள்விகளை எழுப்பவோ விளக்கமளிக்கவோ நாம் இடமளிக்க வேண்டும். எந்த விடயத்திலும் மேன் முறையீடு செய்ய வசதி அளிக்கப்படும். அதையெட்டியே இந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.

அத்துடன் முறைப்பாட்டாளர்கள் வருகை தராததால் கைவிடப்பட்ட விசாரணைகளை மீண்டும் உயிர் கொடுக்க வேண்டுமென்றால் அதனைச் செய்யவும் நாங்கள் தவறக்கூடாது. சபையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. எந்த ஒரு விவாதமும் தனிப்பட்ட ரீதியாக எவரையுந் தாக்குவதாக அமையக்கூடாது. ஒரு விடயம் நடந்ததா இல்லையா என்பதை அறிவதே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் எவரையுந் தாக்குவதையும் அவர்கள் மனத்தைப் புண்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இனியாவது தனிப்பட்ட முறையில் உறுப்பினர்களைத் தாக்குவதைத் தவிர்ப்போமாக!

உங்கள் அனைவரிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அறிக்கையின் பிரதியை சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும்.

குற்றமற்றவர்களே மேரி மக்டெலின் மீது முதற்கல் எறிய முன்வாருங்கள் என்றார் இயேசு கிறீஸ்து நாதர். குற்றஞ்சாட்டுவதால் அரசியல் இலாபம் பெற விழைவோர் தமது நடவடிக்கைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும். நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் எம் ஒவ்வொருவரையும் உள்ளடக்கியது என்பதை மறவாது இருப்போமாக!

இது சம்பந்தமான விவாதத்தை வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறான விடயங்களை நீடிப்பதால் அலுவலகங்களில் வேலைகள் தடைப்பட்டுப் போய் விடுவன. ஆகவேதான்  விவாதத்திற்கு நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் அறிக்கை பற்றிய தமது விளக்கங்களை உடனேயே எழுத்து மூலந் தரவேண்டும். சபையினர் அனைவருக்கும் அறிக்கையும் அந்த விளக்கங்களும் தாமதமில்லாது கையளிக்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More