174
ஈழத்தின் புலோலியில் பிறந்து நியூசீலாந்தின் ஓக்லாந்தில் காலம் ஆகிய தொல்லியல் ஆய்வாளர் அமரர் ஆ . தேவராஜனின் நினைவாக ஓர் ஆவண நூலை வெளியிடுவதற்கு நியூசீலாந்து தமிழ்ச்சங்கம் எண்ணியுள்ளது.
இந்த நூல் தேவராஜன் ஆற்றிய பணிகளை எதிர்கால தமிழ்ச் சமூகத்திற்கு வெளிக்கொணர்வதாக அமையவேண்டும் என விரும்புவதாக இதன் தலைவர் திரு சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நூலை இன்றைய கால கட்டத்தில் தமிழரின் வரலாற்று ஆவணப்படுத்தலில் முக்கிய பங்காற்றும் வகையில் அமைய தேவராஜனின் தொல்லியல் பங்களிப்புத் தொடர்பான ஆவணங்கள் பற்றி அறிந்தவர்களின் ஒத்துழைப்புத் தேவைப்படுவதாக இந்த நூல் உருவாக்க முயற்சியில் ஈடுபடும் ஊடகவியலாளர் எஸ் எம் வரதராஜன் கேட்டுள்ளார்.
இது பற்றி திரு வரதராஜன் குறிப்பிட்டுள்ளதாவது :-
இந்த நூலை வெளிக்கொணர்வது தொடர்பாக தமிழ்த் தொல்லியல் சங்கத்தை முதன் முதல் எழுபதுகளில் திரு தேவராஜனுடன் இணைந்து ஆரம்பித்தவர்களில் ஒருவரான ஊடகப்பெரியார் ஆ .சிவநேசச் செல்வனை முதன்முதலாகத் தொடர்புகொண்டு ஒரு அனுபவப்பகிர்வை வழங்கும்படி கேட்டுள்ளேன். ஆம் என்று பதில் தந்துள்ளார்
மேலும் தொல்லியல் ஆய்வாளர் விசாகன் சுப்பிரமணியம் பேராசிரியர் சிவலிங்கராசா ஆகியோரை இது தொடர்பாக தொடர்புகொண்டுள்ளேன்.
அமரர் தேவராஜன் செய்த ஆய்வுப்பணிகளை வெளிக்கொணர இந்த நூலை ஒரு ஆவணமாக்கவேண்டும் என்ற ஒரு அடிப்படை நோக்கம் என்னிடமிருந்தது. எனினும் பின்னர் நான் மேற்கொண்ட புலமையாளர்களின் தொட ர்புகள் இந்த நூலின் சிறப்பை உணர்த்துகின்றன.
நோர்வேயில் வசிக்கும் ஈழத்தின் தொல்லியல் பேராசிரியர் பொ இரகுபதி அவர்கள் தேவராஜனின் பல முக்கியமான பணிகளை ஒவ்வொன்றாக விதந்து குறிப்பிட்டதுடன் அவர்பற்றிய நினைவுகளை தாம் மலரில் மீட்பதாகச் சொன்னார். ஆயினும் இன்றைய காலத்துக்கு இந்த நூல் தேவராஜன் எழுதிய பல கட்டுரைகளை எமது இளம் சமூகத்திற்கு வழங்கும் பணியைச் செய்ய வேண்டும் என்றார்.
தமிழகத்தின் தொல்லியல் அறிஞர்களான அய்யாவரதம் மகாதேவன் இரா நாகசாமி ஆகியோருடனும் பேராசிரியர் சிவசாமியுடன் தேவராஜன் கொண்டிருந்த தொடர்பையும் அவர் எனக்கு விளக்கினார். ” தேவராஜனின் கட்டுரைகளை இயன்றளவு தேடி எடுக்கப் பாரும்” என்பது அவரது விருப்பம்.
திரு இரகுபதி அவர்கள் குறிப்பிட அதனையே இந்நூல் நோக்காகக் கொள்ளவேண்டும் என்பதில் பேராசிரியர் சிற்றம்பலம் , பேராசிரியர் பத்மநாதன் , இன்று வன்னியின் தொல்லியல் ஆய்வின் மூலம் ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கியமான திருப்பமான ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரை ஆகியோர் ஒருமித்த கருத்தினைக் கொண்டுள்ளனர்.
பேராசிரியர் பொ .இரகுபதி அவர்கள் தேவராஜன் எழுதிய முக்கியமான கட்டுரையான வல்லிபுரம் பற்றிய கட்டுரை புலமையாளர்களின் ஆய்வுக்கு உதவியமை பற்றிக் குறிப்பிட்டு சிலநாட்களின் பின்னர் 73 ஆம் ஆண்டு வீரகேசரியில் வெளிவந்த நாளையும் தந்தார். தேசிய சுவட்டிக் காப்பகத்தில் இந்தக் கட்டுரையை எடுத்துள்ளேன் . ஊடகநண்பர் ஸ்ரீ பிருந்திரன் இதனை எடுப்பதில் இரண்டு நாட்கள் செலவு செய்துள்ளார் . ஊடக நண்பர் ஜெகதீசன் மீளவும் பதிபித்து (கணினி எழுத்தமைப்பில்) தருவதாகச் சொல்லியுள்ளார்.
பெரியார் கே எஸ் சிவகுமாரன் உடனடியாகவே தேவராஜனின் ஊடகப்பணிகள் தொடர்பாக ஒரு கட்டுரையை அனுப்பியுள்ளார். வடமராட்சி ஊடகவியலாளர் தில்லைநாதன் தேவ்ராஜனின் ஊர், அவர் வாழ்ந்த சூழல் பற்றிய பதிவு ஒன்றை எழுதி வருகிறார்.
நான் இலங்கையில் இருந்த வேளை இரத்மலானை இந்துக்கல்லூரி மலரில் காலியில் கடலிலுள்ள கண்டு பிடிக்கப்பட்ட சிவலிங்கம் பற்றி தேவராஜன் எழுதிய கட்டுரையைப் படித்திருந்தேன். இதுபற்றி நான் தேவராஜனிடம் சொன்னபொழுது அவருக்கு நினைவுக்கு அது வரவில்லை. இந்து சமய கலாசாரத் திணைக்களத்தினோடும் தேவராஜன் இணைந்து (தொழிலாக அல்ல) பணியாற்றியுள்ளார்
என்பதை நான் அறிவேன்.
இதனை விட பருத்தித்துறை பிரஜைகள் சபை நீலன் திருச்செல்வத்தின் அனைத்துலக இனக்கற்கை நிறுவனம் ,கொழும்புத் தமிழ்ச்சங்கம் , ஹாட்லி பழைய மாணவர் சங்கம் என இலங்கையில் அவர் பணி அரசியல் சமூகம் என்று பரந்த ஒன்றாகும்.
ஈழப்பிரச்சினையை இந்திய இராஜதந்திரி ஏ பி வெங்கடேஸ்வரனுக்கு முதன் முதல் விளக்கச் சென்ற நால்வரில் தேவராஜனும் ஒருவர்.
தொல்லியல் ரீதியாக வரலாற்றை அவருக்கு விளக்குவதற்கு தேவராஜன் இணைக்கப்பட்டிருந்தார் .மற்றவர்கள் அமரர்கள் அமிர்தலிங்கம் ,சிவசிதம்பரம் , இரா .சம்பந்தன் ஆவர் . தேவராஜனின் கட்டுரைகள் பல உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் மல ர்களிலும் வெளிவந்துள்ளன.
பல பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக்காகவும் அவற்றை உசாத்துணையாக எடுத்துக் பயன்படுத்தியுள்ளனர். இப்படியாக, அவருடைய கட்டுரைகளை வைத்திருப்பவர்கள் அவற்றை இலங்கையில் பெரியார் உடுவை எஸ் தில்லை நடராஜாவிடம் தொடர்பு கொண்டு அவருக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கும்படிஅன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் .
ஜூன் மாத இறுதிக்குள் அவை சேருவது அச்சியல் பணிகளுக்கு வசதியாக அமையும் .
தில்லைநடராஜா :- 0718676498 /[email protected]
வரதராஜன் :-[email protected] m
Spread the love