காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 96 மணி நேரத்தில் மட்டும் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ரம்ஜான் காலத்தில் முன்னெச்சரிக்கையாக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்யும் பாகிஸ்தான் ராணுவத்தின் அசம்பாவித திட்டங்கள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள இந்திய ராணுவ படையின் செய்தி தொடர்பாளர் மச்சில், நௌவ்காம் மற்றும் உரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை இந்திய படையினர் வெற்றிகரமாக சுற்றி வளைத்ததில் இந்த 13 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் வைத்திருந்த வெடி பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் இதர இரசாயனங்கள் பாகிஸ்தானின் வடிவமைப்பை ஒத்திருப்பதாகத் தெரிவித்த அவர் இவற்றை கொண்டு பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பர் என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.