183
01
வண்டில் பூட்டி வந்து
வயல் வெளியிலிருந்து
கோவில் முற்றத்தில் பானை வைத்து
பாற்பொங்கலிட்டு
விடியும் பொழுதுவரை
கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில்
முகம் பரப்பியிருக்க
ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி
இம்முறையும் திரும்பவில்லை
குருதியூறி ஓலங்களால் நிரம்பிய
இதேபோலொரு வைகாசியில்
அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான்
சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க
இருண்ட தாழைமரங்களுக்குள்
கேட்கும் ஒற்றைக்குரல்கள்
அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை
உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய
தனித்தலைபவனின் காலடிகளைத்
தொடரும் நாரைகளும்
மௌனம் கலைத்தேதும் பேசவில்லை
02
அன்று உன் முன்னே
குழந்தைகளை துரத்திச் சுட்டழித்த
ஹெலிகெப்டர்கள் இன்றுன்மீது
குருதி மொச்சையடிக்கும் பூக்களை
வீசக் கண்டு சிவக்கின்றனவுன் கருங்கண்கள்
பண்டார வன்னியன் படைவெல்கையில்
கண்களால் நகைத்த வன்னித் தாய்
ஓயாத அலைகளில் குதூகலித்தாளெனப் பாடிய
இடைச்சிறுவன் தொலைந்ததும் இக்கடலில்தான்
நீதிக்காய் மதுரையை எரித்து
கோபத்தை தணிக்க நீ வந்துறைந்த
வற்றாக் கடலில்
நம் பிணங்கள் மிதக்கையில்
எப்போதும் நகைக்கும் உன் தாமரை கண்கள்
வெகுண்டு துடித்தனவாம்
உன் முன் எதிரி எமை கொன்று வீசுகையில்
புன்னிச்சை காய்களால்
பறங்கித்துரையை துரத்தியபோல்
பகைவரைத் துரத்தியிருந்தாலென்ன?
உன் முன் எமைநோக்கி எதிரிகள் குண்டெறிந்தபோது
கள்வரின் கண்களை மறைத்ததுபோல்
பகைவர் கண்களைக் குருடாக்கியிருந்தாலென்ன?
நீ மட்டுமே பார்த்திருந்தாய்
அடிமையை எதிர்த்தவெம் முதுகுகளை கூனச் செய்தனர்
எம் வானத்துச் சூரியனை வீழ்ந்துருகச் செய்தனர்
எம் நட்சத்திரங்களைக் கருக்கினர்
உன் பூர்வீக ஜனங்களை நாடற்றவர்களாக்கினர்
நீ மட்டுமே பார்த்திருந்தாய்
கைப்பற்றிய என் குழந்தைகளை
யுத்த வெற்றிப் பொருட்களாய் காட்சியப்படுத்தியதை
சரணடைந்த என் சனங்களை
இன்னொரு தேச அடிமைகளாய் துன்புறுருத்தியதை
வெள்ளைக் கொடி ஏந்திய என் போராளிகளின் மார்பில்
துப்பாக்கிகளால் துளையிட்டதை
மாபெரும் தாகம் நிரம்பிய நம் குரல்
உன் முன்பேதான் கரைக்கப்பட்டது
மாபெரும் தகிப்போடிருந்த நம் கனவு
உன் முன்பேதான் புதைக்கப்பட்டது.
உன் தலைவன் கோவலனை கொலை செய்கையில்
நீயடைந்த ஆற்றாத் துயரம்போல்
பாண்டிய மன்னனை தேடிச்செல்கையில்
நீயடைந்த வெஞ்சினம்போல்
உன் கணவன் குற்றமற்றவன் என வெகுண்டழுந்து
நீ உடைத்தெறிந்த பொற்ச் சிலம்புபோல்
நீதிக்காய் ஆவேசத்துடன்
கொதித்துச் சிதறிய மாணிக்கப் பரல்கள்போல்
புன்னகை கழன்று கண்ணீர் பிரவாகித்து
பெருங்கடலானவுன் கண்களைப் போல்
பொங்கி வழியுமொரு
வைகாசி விசாகப் பொங்கல் போல்
ஊதி வெடிக்கின்றன நம் இருதயங்கள்
03
முள்ளிவாய்க்காலெதிரே
நந்திக்கடலோரமிருந்து
ஆயிரங்கண்களால்
யவாற்றையும் பார்த்திருந்த சாட்சியே
நீ கண்டிருப்பாய்
என் காதலி என்ன ஆனாளென?
ஆடுகளுமற்று
பாற்புக்கை காய்ச்சி
உன் தலையில் பேனெடுக்கும்
இடைச் சிறுவர்களுமற்றிருக்கும் நந்திவெ ளியில்
நூற்றாண்டுகளாய்த் தனிமையிருக்குமுன் போல்
திரும்பி வராத தோழிக்காய் உழல்கிறேன்
நீதிக்காய் வழக்குரைத்து
நெடுஞ்செழியனை நடுங்கச்செய்து
அநீதியை சாம்பாலாக்கிய நந்திக்கடலரசியே
காணமற்போன என் காதல் தோழியை மீட்க
முல்லைக் கடல் பட்டின
அநீதிச் சபைக்கு வந்தொரு வழக்குரைப்பாயா?
-தீபச்செல்வன்
பண்டார வன்னியன்: வெள்ளையருக்கு எதிராக போரிட்ட வன்னி அரசன். ஓயாத அலைகள்: இலங்கை இராணுவத்தை தோற்கடித்து முல்லைத்தீவை கைபற்றிய விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை. வற்றாப்பளை: மதுரையை எரித்த பின்னர் கண்ணகி ஈழத்தில் வன்னியில் வந்து இறுதியாக தங்கிய ஊராக நம்பப்படுகிறது. இது ஈழ இறுதி யுத்தம் நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்கால் அருகிலும் நந்திக்கடல் வெளியிலும் உள்ளது.
Spread the love