புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறையிலான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கூடியது.
அதன் போது மாணவி படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கு தொடுனர்கள் சார்பில் ஆஜராகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி வழக்குறைஞர் எஸ்.குமாரரத்தினம் எதிரிகள் மேலான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் வழக்கின் 37 சாட்சிகளின் வாக்குமூல அறிக்கை மற்றும் சான்றுப்பொருட்களின் அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்தார்
கடத்தியமை வன்புணர்வு செய்தமை கொலை செய்தமை மற்றும் மேற்படி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய பிரதான குற்றங்கள் அடங்கிய 41 குற்றச்சாட்டுக்களும் மன்றில் எதிரிகளுக்கு வாசிக்கப்பட்டதுடன் சகல குற்றச்சாட்டுக்களையும் ஒன்பது எதிரிகளும் மறுப்பதாக மன்றில் தெரிவித்தனர்
அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 28ஆம், 29ஆம், 30ஆம், 3ஆம் , 4ஆம் , மற்றும் 5 ஆம் திகதிகளில் தொடர் விசாரணைகளாக நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.