இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கன மழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக பங்களாதேசிலும் , இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
பங்களாதேசை அண்மித்துள்ள மிசோரம் மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் முழ்கியுள்ளதாகவும் அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக அனைத்து இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருப்பதுடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மாநிலத்தின் போக்குவரத்து தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவையும் துண்டிக்கப்பட்டுள்ளன. 450 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன எனவும் பல்லாயிரக்கணக்கானோர் வெள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
இதே போல் அசாம் மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கு மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவரும், ரிக்ஷா தொழிலாளி ஒருவரும் உயிர் இழந்துள்ளனர். அசாம், மிசோரம் இரு மாநிலத்திலும் சேர்த்து 12 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.
இன்னும் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளதனால் பாதிப்பு மேலும் அதிகமாகும் என எதிர் பார்க்கப்படுகிறது