வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக வடமாகாண சபையினால் சுமார் 23 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை முன் வைத்து , விசாரணை குழு அமைத்து , குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிட்ட குற்றசாட்டு தொடர்பில் தன்னிலை விளக்கம் கொடுக்க என இதுவரை மாகாண சபையில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றுள்ளன. அதற்காக 20 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதேவேளை குறித்த விசாரணை குழுவிற்காக 3 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது என தெரியவருகிறது. இந்த விசாரணைக்காக மாகாண சபை நிதி 23 இலட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. இது மாகாண சபை நிதி வீண் விரயமாக்கப்படவில்லையா ? என இன்றைய சபை அமர்வு முடிவடைந்த பின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் ஊடகவியாளர் மத்தியில் விசனத்துடன் தெரிவித்தார்.
1 comment
வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக வடமாகாண சபையினால் சுமார் 23 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. என்ற அவைத் தலைவரின் அறிக்கை இங்கு எந்த வகையில் முக்கியமானது? குறித்த அமைச்சர்களுக்கு எதிரான ஊழல்க் குற்றச்சாட்டு விசாரணையைக் கோரியவர்களே ஆளும் கட்சி உறுப்பினர்கள்தானே?
விசாரணை என்று வந்தால் செலவு ஏற்படுமென்பதை அவைத் தலைவர் அறியாரா?
இனப் பிரச்சனைத் தீர்வு தொடர்பில், அன்றைய , இன்றைய அரசுகள் நியமித்த விசாரணக் குழுக்களுக்காக அரசுகள் செலவு செய்த பல கோடிகள் குறித்து மக்கள் அறிவார்கள்தானே? குறித்த செலவைப் பாராளுமன்றம் ஏற்கவில்லையா? இத்தனைக்கும், குறித்த அறிக்கைகளோ அன்றி அவற்றின் சிபார்சுகளோ இன்று வரை கிடப்பில்தான் போடப்பட்டுள்ளன!
அவைத் தலைவர் அறிக்கைப்படி, மாகாணசபை கூட்டப்பட்ட வகையில் 20 லட்சமும், விசாரணைக் குழு தொடர்பில் 3 லட்சமும்தான் செலவாகி இருக்கின்றது! இதில் புதுமை என்ன இருக்கின்றது? ஒரு நாள் பாராளுமன்றைக் கூட்ட இலங்கை அரசுக்கு ஆகும் செலவு எத்தனை கோடிகள் என்பதை இவர்கள் அறிவார்களா?
முதலமைச்சர் மேற்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகள் காரணமாக, அடிவானில் தெரிந்த நம்பிக்கை ஒளிக்கீற்றைத் தமிழரசுக் கட்சியும், நல்லாட்சி அரசும் திட்டமிட்டுச் சதி செய்து சிதைக்க முற்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது?
ஊழல் விசாரணை அறிக்கை தொடர்பில் முதலமைச்சரின் தீர்மானம் நியாயமானதே! தாம் குற்றமற்றவர்கள் என்பதை, அமைச்சர்கள்தான் நிரூபிக்க வேண்டும்! அதை விடுத்து, முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து பதவியைப் பறிக்க நினைப்பது, ஊழலையும், ஊழல் பேர்வளிகளையம் ஊக்குவிப்பதாகவும், அவர்களின் செயலை நியாயப்படுத்துவதாகவுமே அமையும்!
‘குறித்த ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில் நான் தலையிடப் போவதில்லை’, என்று கூறிய திரு. சம்பந்தர் தலைமையிலான TNA, முதல்வருக்கு எதிரானதொரு நம்பிக்கையில்லாத தீர்மானத்தை எப்படிக் கொண்டுவரத் தீர்மானித்தது? இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் திரு. சம்பந்தனும், தமிழரசுக் கட்சித் தலைவர் திரு. மாவை. சேனாதிராஜாவும் கபட நாடகமாடுகின்றார்கள்! தம்மை நம்பி வாக்களித்த மக்களை இவர்கள் ஏமாற்றுகின்றார்கள்!
திரு. விக்னேஸ்வரனிடமிருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்படுமானால், TNA மீதான மக்கள் ஆதரவு முற்றிலுமாக இல்லாது போகும், என்பதில் சந்தேகமில்லை! முதல்வர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து என்ன நிலைப்பாட்டை எடுப்பாரோ தெரியாது? எனினும், அவர் தலைமையில் ஒரு புதிய கட்சி உருவாகுமானால், அமெரிக்காவிலும், பிரான்சிலும் ஏற்பட்டது போன்றதொரு அரசியல் மாற்றத்தை வடமாகாண சபையும் காணும், என்பதில் சந்தேகமில்லை!