இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படாது எனக் கூற முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைச்சுஇலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்த பயண அறிவுறுத்தல்களில் இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் இல்லை என்பதற்கில்லை என தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பிரித்தானியாவின் மதிப்பீடுகளில் மாற்றமில்லை என குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடையிலான மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. அத்துடன் 2011ம் ஆண்டில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் உயர் பாதுகாப்பு வலயங்கள், இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்லும் போது விழிப்புடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படுவதாகவும், பிரித்தானிய பிரஜைகள் எவரேனும் இவ்வாறு கைது செய்யப்பட்டால் அது குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்க வேண்டுமெனவும் பயண அறிவுறுத்தல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.