தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் அரசியல் போராட்டத்தை கொச்சைப்படுத்தி மலினப்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை வடமாகாண சபை உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மேல்மாகாண சபை உறுப்பினர் சன் குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்பகுதியில் செயற்படும் நாங்கள் அரசியல்வாதிகள். ஆனால் நீங்கள் இரத்தம் சிந்திய பூமியை பாதுகாக்கும் காவலர்கள் என்று கருதி செயற்படுங்கள் எனவும் சன் குகவரதன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் குழப்ப நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இனப்பிரச்சினைத்தீர்வாக மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் அது ஏற்புடையதல்ல என்று கூறி 19987ஆம் ஆண்டு புலிகள் உட்பட தமிழத் தலைவர்கள் பலரும் அதனை நிரகரித்து விட்டனர். ஆனாலும் துரதிஸ்டவசமாக அது இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்படுகின்றது.
இரண்டு மாகாணங்களும் உயர் நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட நிலையில் இயங்கினாலும் தமிழர்களுக்கு மேலும் அதிகாரபகிர்வு அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் துரதிஸ்டவசமாக செயற்படுகின்ற இந்த மாகாண சபையில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இறைமை சார்ந்த அரசியல் கோரிக்கையை மலினப்படுத்த வேண்டாம்.
உரிமைக்காக 30 ஆண்டுகால போரில் இரத்தம் சிந்திய பிரதேசம் ஒன்றில் சாதாரண அரசியல்வாதிகளைப் போன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்பட முடியாது. யுத்தத்தின் பக்கவிளைவுகளுக்குக் கூட இன்னமும் உரிய முறையில் தீர்வு முன்வைக்கப்படவில்லை.
காணாமல்போனவர்களின் உறவினர்கள், காணிகளை இழந்தவர்கள், வேலையில்லா பட்டதாரிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வுடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களும் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகவே இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகம் ஒன்றின் அரசியல் தலைவர்கள் தமக்குள்ளே மோதிக்கொள்வது கவலையானது. தென்பகுதி சிங்கள இனவாதிகளுக்கும் அது வாய்ப்பாக அமைந்துவிடும். அரசியல் தீர்வை மேலும் பிற்போடுவதற்கு நல்லாட்சி அரசாங்கத்துக்குக் கூட வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஆகவே மக்களின் மன நிலையை உணர்ந்து நீதியரசர் விக்னேஸ்வரனின் கரங்களை பலப்படுத்தும் செயற்பாடுகளை தமிழ் மக்களும் சிவில் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும் பிழையான அரசியல் பாதையில் செல்லும் தமிழரசுக் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து அமைதியான சூழலை உருவாக்க முற்பட வேண்டும்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தென்பகுதியில் உள்ள சாதாரண அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் போன்று செயற்பட முடியாது. நிரந்த அரசியல்தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தேசிய இயக்கம் பேன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மாறாக ஆளுநரை சந்தித்து நம்பிக்கையில்லா பிரேரணை கொடுத்து முதலமைச்சரை மாற்றுமாறு கோருவது வெட்கப்பட வேண்டிய செயல்.
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழ் மக்கள் அவ்வாறான சாதாரண அரசியல் செயற்பாடுகளை எதிர்பார்க்கவில்லை. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிம்மதியாக வாழக்கூடிய சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஜனநாயக வழியில் செயற்படுத்தி அந்த உரிமையை உறுதிப்படுத்தவே மக்கள் விரும்புகின்றனர்.
ஆகவே அந்த மக்களின் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தியாக மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும். தென்பகுதியில் செயற்படும் நாங்கள் அரசியல்வாதிகள் ஆனால் நீங்கள் இரத்தம் சிந்திய பூமியை பாதுகாக்கும் காவலர்கள் என்று கருதி செயற்படுங்கள் என சன் குகவரதன் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
1 comment
கிடைத்துள்ள ஆதாரங்களுக்கமைய குகவரதன் ஒரு மோசடிக்காரன் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. தக்க ஆதாரமின்றி அரசியல் பழிவாங்கல் என்று கூறி தப்பிக்க நினைப்பது குகவரதனுடைய அரசியல் அநாகரிகத்தைக் காட்டுகிறது. மோசடியை அனுமதிக்காது நியாயம் கிடைக்க வழிகோலிய மனோவின் உயரிய பண்பிற்குப் பாராட்டுக்கள்.