கிளிநொச்சி வலயத்தில் இருபது வரையான பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பாடசாலை முதல்வர்களினால் வலயக் கல்விப் பணிமனைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பூநகரிக் கல்விக் கோட்டத்திலேயே பன்னிரண்டுக்கு மேற்பட்ட பாடசாலைகள் குடிநீர் நெருக்கடி எதிர்கொண்டுள்ளன. கிளிநொச்சி நகரத்திலே கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி என்பன குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. பூநகரிக் கல்விக் கோட்டத்தில் கடந்த காலங்களில் பிரதேச சபை மூலமும் பிரதேச செயலகம் மூலமும் பாடசாலைகளுக்கு குடிநீர் வழங்கல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது பாடசாலைகளுக்கு குடிநீர் விநியோகம் இடம்பெறுவதில்லை என தெரிவிக்கும் பாடசாலை முதல்வர்கள் குடிநீர் நெருக்கடியினைத் தீர்க்குமாறு வலயக் கல்விப் பணிமனையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டு தோறும் கிளிநொச்சி மாவட்டத்திலே ஆறாம், ஏழாம், எட்டாம் மாதங்களில் கடுமையான குடிநீர் நெருக்கடி ஏற்படுவதுண்டு. பாடசாலைகள் மட்டுமன்றி கிராமங்கள் ரீதியாகவும் குடிநீர் நெருக்கடி ஏற்படும். கிளிநொச்சி மாவட்டத்திலே உவரடைந்து வரும் பகுதியாக பூநகரிப் பிரதேசம் காணப்படுவதனால் குடிநீர் நெருக்கடி இப்பகுதியில் கூடுதலாகக் காணப்படுகின்றது.