போரும்போருக்குப் பின்னரானகாலத்தும் தொட்டுணராப் பண்பாட்டுமரபுரிமைகள் எதிர்கொள்ளும் சவால்களும்அவற்றின் முக்கியத்துவமும்
பண்பாட்டு மரபுரிமைகள் பற்றிய உரையாடலில் மிகப் பெரும்பாலும் தொட்டுணரக் கூடியவை பற்றி பேசப்படுவதே அதிகமாதாகவும், அதிகாரபூர்வமானதாகவும் இருந்துவருகின்றது.
சிற்பம், ஓவியம், கட்டடம், இடம ;என்பவை இந்தவகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. சடங்குகள், கொண்டாட்டங்கள், ஆற்றுகைகள் உள்ளிட்டசமூகப் பண்பாட்டுப் புளக்கங்கள்,வாழ்வியல் செயற்பாடுகள் என்பவை வாழ்வை வடிவமைப்பதில் அதிகசெல்வாக்கைக் கொண்டிருப்பினும் அதிககவனத்தைப் பெறுவதாக இல்லை. நாட்டுப்புற வழக்காற்றுகற்கைகளில் இவை கவனத்தில் கொள்ளப்படினும் ஈழச் சூழலில் மேற்படிகற்கைகள் இன்னமும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பெற்றதாக இல்லை.
இந்நிலையில் போர்க் காலத்திலும் போருக்குப்பின்னரானகாலத்திலும் மனிதவாழ்வை வடிவமைக்கின்ற பண்பாட்டு மரபுரிமைகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன, முக்கியமான பங்கையும் ஆற்றிவருகின்றன. போரனர்த்த அழுத்தங்களில் இருந்து விடுவிப்பு, இடம்பெயர்வு மற்றும் மீள்குடியேற்ற வேளைகளில் ஒன்றிணைத்தல், சமுதாயமயப்படுத்தல், வாழ்க்கையை மீளத் தொடங்குவதற்கு ஆற்றுப்படுத்தல், ஆற்றல்களைக் கொண்டாடுதல், உளுர் அறிவு, திறன் என்பவை வாழ்க்கையை மீளவும் உருவாக்குவதற்கான மூலாதாரங்களாக விளங்குதல் எனப் பேசாப் பொருளாகவே இவை இயங்கிவருகின்றன.
மேலும் தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் ஆவணப்படுத்தலுக்கோ வணிகத்திற்கோ உரிய விடயங்களாகவே அதிகம் பரப்புரை செய்யப்படுகின்றன. ஆனால் அவை மனிதசமூகங்களின் வாழ்வியல் வளத்திற்கும், வாழ்வியல் இயக்கத்திற்கும் பங்களிப்புச் செய்பவை. தலைமுறைகளின் சுயாதீன இருப்பிற்கும் அதேவேளை கட்டுப்பாடுகள், கட்டுப்பெட்டித் தனங்களுக்கும் காலாயிருப்பவை.
எனவே உணர்ந்தும் உணராமலும், அறிந்தும் அறியாமலும் வாழ்வியலை வடிவமைத்துக் கொண்டிருக்கின்ற, பேசாப் பொருளாகவே அதிகம் காணப்படுகின்ற தொட்டுணராப் பண்பாட்டு மரபுரிமைகள் மீதான கவனத்தைக் கோரும் வகையிலும், அவற்றில் இக்காலத் தேவையை அறியவும் உணரவும் கூடியவகையிலும் உலக ஆராய்ச்சிமாநாடு 2017 திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் உலக ஆராய்ச்சி மாநாடு– 2016, பூகோளமயமாக்கற் சூழலில் பாரம்பரியக் கலைகள் என்றதலைப்பில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் உலக ஆராய்ச்சிமாநாடு– 2017 அமைகிறது.
அறிஞர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி கலைஞர்கள், தொழில் முறையாளர்கள், உள்ளுர் அறிவுதிறன் வல்லுனர்கள் எனவிடயங்களுடன் நேரடியான உறவையும் தொடர்பையும் இணைத்ததான சூழ்நிலையில் அமைந்த, முக்கியமாகப் பங்குகொள் செயல்மைய ஆய்வுகள் அதிககவனத்திற்குரியவையாகக் கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக ஆராய்ச்சிகளுங்கூட ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள் எனப் பலபரிமாணங்களைக் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்தவகையிலான ஆராய்ச்சி மாநாடு, முன்னெடுக்கப்பட்டுவரும் ஆராய்ச்சி செயற்பாடுகளின் மதிப்பீடுகளுக்கான சந்திப்பாகவும், புதியசிந்தனைகள், புதியதொடர்புகளுடன் தொடர்ந்த முன்னெடுப்புகளுக்கான உந்து புள்ளியாகவும் அமைகின்றது. ஜுன 15மாலை 6.00 மணிக்கு தொடக்கவைபவத்துடன் ஆரம்பமாகும் மாநாட்டின் அமர்வுகள் 16, 17ம்திகதிகளில் இடம்பெறும். விருப்பத் தெரிவுக்குரிய கலைப் பண்பாட்டுக் களப்பயணம் 18ம்திகதி இடம்பெறுகின்றது.
கலாநிதிசி. ஜெயசங்கர்
ஆளுமை உருவாக்கக் களங்களாக அழகியற் கற்கைகள், அழகியல் ஆய்வுக் களங்கள்
சமூகப் பண்பாட்டுப் பொருளாதார உருவாக்கங்களில் அழகியற் கற்கைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அழகியல் உணர்வும் சமூக நோக்கும் கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் சமூகங்களின் நிலைநிற்கும் வளர்ச்சிக்கு அடிப்படையானவை.
உலகமும் உலகத்து வளங்களும் அனைத்து உயிர்வாழ் இனங்களதும் ஆக்கபூர்வான இருப்பிற்கும் வனப்பிற்கும் அடிப்படையானவை என்ற ஆழ்ந்த அறிவும் உணர்வும் கொண்ட ஆளுமைகளின் உருவாக்கம் என்பது இயல்பான எதிர்பார்ப்பாகும்.
இத்தகைய வளமான எண்ணமும் சிந்தனையும் படைப்பாளுமையும் கொண்டு சமூகமயப்பட்டு இயங்கும் அழகியற் பட்டதாரிகளின் உருவாக்கம் காலத்தின் தேவையாகும்.
அழகியற் கற்கைகள் அலங்கரிப்புக்கான விடயங்கள் அல்ல. அவை முழு ஆளுமை கொண்ட மனிதர்களின் உருவாக்கங்களிற்கான அறிவுக் களங்களாகும். சமூகங்களின் நிலைநிற்கும் அபிவிருத்திக்கான அறிவுத் தேட்டம் என்பது முழுமையான அழகியற் கற்கைகளின் பங்களிப்பில் தங்கியிருக்கின்றது.
கிழக்குப் பல்கலைக் கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் இந்த வகையிலேயே ஆற்றுகைக் கற்கைகளை முன்னெடுப்பதில் கவனங் கொள்கிறது.
ஆற்றுகை மையப்பட்டும் சமூகமயப்பட்டும் முன்னெடுக்கப்படும் கற்கைநெறிகளின் பல்வேறு அம்சங்களுள் ஒன்றாக வருடாந்த உலக ஆராய்ச்சி மாநாடு வடிவமைக்கப்பட்டு; இரண்டாவது முறையாக ஜீன் 2017ல் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றோம்.
இந்த வருடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆயினும் அதிக கவனத்திற்கு கொள்ளப்படாததுமான ‘போரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும்’ என்ற தொனிப் பொருளில் ஆராய்ச்சி மாநாடு அமைக்கப்பட்டிருக்கின்றது.
‘உலகமயமாக்கற் சூழலில் பாரம்பரியக் கலைகள்’ என்ற கடந்த வருட உலக ஆராய்ச்சி மாநாட்டின் தொனிப்பொருளின் தொடர்ச்சியாகவும், மிகவும் புதியதும், கவனத்திற்குரியமான விடயத்தில் இந்த வருட மாநாடும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அறிஞர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்;கள், பத்திரிகையாளர்கள், ஆய்வு மாணவர்கள், தொழில்வினைஞர்கள் இணைந்ததான தொடர் செயற்பாடுகள், உரையாடல்களின் தொடர்ச்சியாகவும், மதீப்பீட்டுக்கும் முன்னோக்கிய செயற்படுகைக்குமான பெரும் சந்திப்பாகவும் ஆய்வுகளும், ஆய்வு அமர்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றன.
இதற்குச் சமாந்தரமாக மரபு ரீதியான ஆராய்ச்சி மாநாட்டுப் பொறிமுறையூடாகவும் ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு இணைப்பாளர்களின் மூலம் ஆய்வாளர்கள் தொடர்புபடுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட உரையாடல்களுடன் ஆய்வு அமர்வுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆய்வுச் செயற்பாடு தனிமனிதப் பயணமுமல்ல ஆவணப்படுத்தலுடன் மட்டுப்படுவதுமல்ல அது ஊடாட்டங்களினூடான சமூக மையச் செயற்பாடு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் நிகழ்கிறது இந்த ஆராய்ச்சி மாநாடு.
அடுத்த கட்ட முன்னெடுப்பிற்கான மதிப்பீடுகளையும், மறுமதிப்பீடுகளையும் செய்து கொள்வதற்கும்; தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், புதிதாக ஏற்படுத்திக் கொள்வதற்குமான சந்திப்பாக இம்மாநாடு அமைகின்றது.
கலாநிதி சி. ஜெயசங்கர்