வடமாகாண சர்ச்சைக்கு தீர்வு காண கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக கூட்டப்பட வேண்டுமென சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுமூகமான தீர்வை எட்டும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் ரெலோ அமைப்பு நேற்று முன்னெடுத்த ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் கவுன்சில் விவாதித்து எடுத்த முடிவின் அடிப்படையில் முதலமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணை குழு அறிக்கை தொடர்பில் முதலமைச்சர் எடுத்த முடிவு தொடர்பில் அதிருப்தி காணப்படுமாயின் அது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவில் ஆராயப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆனால் அவ்வாறின்றி தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.