தமிழரசுக் கட்சியின் தற்போதைய நடவடிக்கை ஊழலுக்கு எதிரான செயற்பாடே ஆகும். இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல், பண மோசடி, மற்றும் இலஞ்சத்திற்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடே ஆகும். முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும். ஆரம்பத்திலிரு
தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள்.
அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே ஐங்கரநேசன் குற்றமற்றவர் என்றும் “அவர் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டார்” என்று சொன்னதை எவரும் மறந்திருக்க முடியாது.
எமது வற்புறுத்தலின் காரணமாகத் தான் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. அந்த வேளையிலும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசனுக்கு எதிராக மட்டுமே இருந்தன. அப்படியிருந்தும் அவரை பாதுகாக்கும் முகமாகவே எல்லா அமைச்சர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக் குழுவினரை முதலமைச்சரே தனியாக தேர்ந்தெடுத்து நியமித்தார். இறுதியில் ஐங்கரநேசன் மட்டுமே ஊழல் பண மோசடி மற்றும் இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார்.
அமைச்சர் குருகுலராஜா அதிகார வரம்பை மீறினார் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டார். மற்றைய இரண்டு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு முதலமைச்சர் நியமித்த குழு அறிக்கை மூலமாகவும் ஊர்ஜிதமானது. மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்த போதும் குற்றவாளிகளாக காணப்பட்ட 2 அமைச்சர்களையும் பாதுகாக்கும் முகமாக முதலமைச்சர் அவ்வறிக்கையை மறைத்து வைத்திருந்தார். 2 பத்திரிகைகள் அதை வெளிப்படுத்திய பின் தான் மாகாண சபையில் இவ்வறிக்கையை சமர்ப்பித்தார்.
இதன் பொழுதெல்லாம் ஊழலையும் குற்றவாளிகளையும் காப்பாற்ற முதலமைச்சர் எடுத்த இம்முயற்சிகளுக்கெதிராக எமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கெதிரான நடவிடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் என்றும் அதில் நாம் தலையிட மாட்டோம் என்றும் பகிரங்கமாகவே அறிவித்திருந்தோம்.
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றவாளிகளை காப்பாற்றும் தனது முயற்சியை இவ்வேளையில் வேறு விதமாக முன்னெடுத்தார். குற்றவாளிகளாக காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காமல் தவிர்த்து அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முன் வைத்தார். குற்றவாளிகளையும் குற்றங்களிலிருந்து விடிவிக்கப்பட்டவர்களையும் ஒன்றாக பதவி நீக்கம் செய்வதென்பது குற்றங்களை நீர்த்துப் போகப்பண்ணி குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே ஆகும்.
தனது இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரைத் தவிர்த்து மற்றைய கட்சித் தலைத்தலைவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தியிருந்தார். இதை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் வினவிய பின்னர் தான் காலம் தாழ்த்தி திரு. சேனாதிராஜாவுடனும் பேசினார். ஊழலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவர் முதலமைச்சருக்கு கூறியிருந்தார்.
நால்வரையும் ஒன்றாக நீக்குவதென்பது நிரூபிக்கப்பட்ட குற்றங்களை மழுங்கடிக்கும் செயல் என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவருக்கு கூறப்பட்டது. இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தனும் அவருக்கு கூறியிருந்தார்.
ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கையாக குற்றவாளிகளாக க் காணப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட வேண்டும் என்று திரு. சம்பந்தனும் திரு. சேனாதிராஜாவும் கூறிய கருத்துக்கு மறு நாள் மாகாண சபை உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் அறிந்த பின் பதிலளிப்பேன் என்று சொன்ன முதலமைச்சர் அப்படிச் செய்யாமல் அடுத்த நாள் மாகாண சபையிலே தன்னுடைய தீர்ப்பை வழங்கினார்.
நால்வரும் குற்றவாளிகள் என்ற பொய்யான பிம்பத்தை தோற்றுவித்து உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே இது. அதனால் தான் அனைத்து குற்றங்களிலிருந்தும் விடுக்கப்பட்ட 2 அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு பணித்தமைக்கு எமது எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தோம்.
ஊழலை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் முதலமைச்சரின் இந்தத் தொடர்ச்சியான செயற்பாட்டின் நிமித்தமாகவே இலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சரில் நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகும்.
M. A. சுமந்திரன்
பேச்சாளர்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி
16. 06. 2017
2 comments
சுமந்திரன் அப்படியே தோசையை திருப்பி போடுகிறார்
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை வடமாகாணத்தில் பெற்ற முதலமைச்சர் மேல் குற்றம் சுமத்த மக்களின் ஆணையின்றி பின் கதவால் பாராளுமன்றம் நூளைந்தவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
‘வட மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தமை ஊழல், பண மோசடி, மற்றும் இலஞ்சத்திற்கு எதிரான எமது தீவிரமான செயற்பாடே ஆகும். முதலமைச்சர் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் தடுக்க முயல்கிறோம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதும் உண்மையான நிலைமைக்கு நேர் எதிரானதுமாகும்’, என்று கூறிச் சட்டத்தரணியாக திரு. சுமந்திரன் தன்னை அதிபுத்திசாலியாகவும், மக்களை அடிமுட்டாள்களாகவும் சித்தரிக்க முயலுகின்றார்! திரு.சுமந்திரன் நியாயமாகச் செயற்படுபவராக இருந்தால், இன்று முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருக்க வேண்டுமே? அன்று அவர் விட்ட தவறைத் திருத்த, நம்பிக்கையில்லாத் தீர்மானமும் பதவிப் பிறிப்பும் தீர்வல்லவே?
அவர் கூறியிருப்பது போல், ஒரு காலகட்டத்தில், மாகாண சபையில் 4 அமைச்சர்களும் முதலமைச்சரும் ஒரு கூட்டாகவிருந்து ஏனைய உறுப்பினர்களின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாதிருந்தது உண்மைதான்! அந்நாட்களில் பொதுமக்கள் பலருக்கும் இவர்களின் நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியதுண்டு. அதற்குக் காரணமில்லாமலில்லை! வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாகின்ற வரையில் குறித்த 4 நபர்களையும் முதலமைச்சர் அறிந்திருக்க வாய்ப்பில்லை! அதே நேரத்தில், TNA உறுப்பினர்களின் சிபாரிசின் மூலம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களிடையே அமைச்சர்கள் தெரிவின்போது முதலமைச்சரின் பங்கு மிகச் சிறிய அளவிலேயே இருந்திருக்குமென்பதையும் மறுப்பதற்கில்லை? அரசியல் சாணக்கியனான திரு. சம்பந்தர் மற்றும் சுமந்திரன் போன்றோரின் சிபாரிசின் மூலம் தெரிவான, கௌரவமான சமூகப் பின்னணியைக் கொண்டிருந்த அமைச்சர்கள் மீது அதீத நம்பிக்கையை முதலமைச்சர் கொண்டிருந்தமைக்கான காரணம் அதுவாகக் கூட இருக்கலாமல்லவா?
‘வெளுத்ததெல்லாம் பால்’, என நம்பித் தான் செயற்பட்டதாகவும், அது தவறென்பதைக் காலம் கடந்தே தான் உணர்ந்ததாகவும் முதலமைச்சரே கூறியிருக்கின்றாரே? திரு. சுமந்திரனின் வியாக்கியானத்துக்கு முன்னதாகவே அவர் தனது தவறை ஏற்றுக்கொண்டிருக்கின்றார், என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்!
திரு. டெனிஸ்வரன் மற்றும் திரு. சத்தியலிங்கம் தொடர்பில், ‘இவ்விரு அமைச்சர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்’, என அப்பட்டமாகப் பொய்யுரைக்கும் திரு.சுமந்திரன், அவர்கள் தொடர்பில் முதலமைச்சரின் தீர்மானத்தில் குறை காணுகின்றார்! குறித்த இரு அமைச்சர்களுக்கும் எதிராக விசாரணைகளே இது வரையில் நடைபெறாதபோது, அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் இருந்து அவர்களை யார் விடுவித்தார்கள்? மேலும், அமைச்சர்கள் நால்வரையும் பதவி நீக்கம் செய்யும் தனது யோசனையை முதலமைச்சர் முன்வைத்தாரென்று மேலும் ஒரு பொய்யைத் திரு சுமந்திரன் அவிழ்த்து விடுகின்றார்? சுயநினைவுடன்தான் திரு. சுமந்திரன் இது போன்றதொரு அறிக்கையை விட்டுள்ளாரா?
மேலும், ஊழல் விசாரணைக் குழுவின் தீர்ப்பை அடிப்படையாக வைத்துப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றபோதும், அவர் அதைச் செய்யவில்லையே? குற்றத்துக்குப் பொறுப்பேற்று இருவரை இராஜினாமாச் செய்யும்படியும், ஏனைய இருவரையும் விடுமுறையில் செல்லும் படியும்தானே கோரினார்! அதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லையே?
திரு. சுமந்திரன் மக்களை இன்னும் மாக்களாகவே பார்க்கின்றார் போலும்? தனது வாதம் மூலம் தமது முட்டாள் தனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயல்வது, புரிகின்றது. இதில் வீம்பு வேறு தேவைதானா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட, ஊழல் பெருச்சாளிகளான சில உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கை இழந்திருந்தாலும், மக்கள் அவர் மீது நம்பிக்கை இழக்கவில்லை, என்ற யதார்த்தத்தை இனிமேலாவது புரிந்துகொள்வார்களா? மக்கள் இன்று மிக விபரமாகவும், விவேகமாகவும் சிந்திக்கின்றார்கள்! சட்டக் கல்வியோ அன்றிச் சான்றிதழோ இல்லையேயன்றி, மக்கள் சகல பிரச்சனைகள் தொடர்பிலும் சரியான தீர்ப்பையே கொண்டுள்ளார்கள்!