Home இலங்கை புலிகளின் தளபதி விதுசாவை தந்த கப்பூது கிராமம் கேட்பாரற்றுப் போனது – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:-

புலிகளின் தளபதி விதுசாவை தந்த கப்பூது கிராமம் கேட்பாரற்றுப் போனது – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துன்னாலைச் செல்வம்:-

by admin

வடமராட்சி கரவெட்டி வடக்கு எல்லைகளாகவும், வரணியை கிழக்கு எல்லைகளாகவும், ஆவரங்காலை மேற்கு எல்லைகளாகவும், வாதரவத்தை பகுதியை தெற்கு எல்லைகளாகவும் கொண்ட கலை கலாச்சார பண்பாடுகளை தன்னகத்தே கொண்டது தான் இந்த கப்பூது கிராமம் ஆகும். யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் யாழ் வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி; பகுதிகளுக்கு செல்வதற்கான இடைப் பிரதேசமாக கப்பூது வெளி வழிகாட்டி நின்ற பெருமை இருக்கிறது.

கப்பூது கிராமத்தில் குறைந்தளவு மக்கள் அதாவது 21 குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும் முதியவர்கள் தான் அதிகமாக அங்கு இருக்கின்றனர். தாம் பரம்பரையாக வாழ்ந்த நிலத்தினை விட்டுப் போக மனமில்லாமல் செத்தாலும் இந்த மண்ணில் இருந்து சாவோம் என்று இருக்கின்றனர். கிராமசேவகர் அலுவலகம் ஒன்று இருக்கின்றது இந்த அலுவலகம் வாரத்துக்கு ஒரு தடவை திறந்திருக்கும்.

போர் இடம்பெற்ற காலப் பகுதியில் இராணுவத்தின் அழுத்ததிற்கு முகம் கொடுத்து வந்தனர். போராட்ட காலப் பகுதியில் பல இளைஞர்கள் யுவதிகள் தொடக்கம் குழந்தைகள் முதியவர் வரை இராணுவத்தினரால் கட்டி வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய மறக்க முடியாது இன்றும் இருக்கிறது. அந்த நாள்களில் இராணுவத்தினரின் கூடுதலான அழுத்தங்கள் இருந்தாலும் இராணுவத்தினருக்கு காட்டிக் கொடுக்காமல் விடுதலைப் புலிகளை பாதுகாத்த வரலாறு இந்த கிராமத்துக்கு உண்டு. விடுதலைப் புலிகள் இராணுவத்தினர் மீது ஒரு பிரதேசத்தில் தாக்குதலை மேற்கொண்டு விட்டு இந்த கிராமத்தின் ஊடாகத் தான் சென்று அடுத்த பிரதேசத்துக்குள் நுழைவார்கள். யாழில் விடுதலைப் புலிகள் இலகுவாக போர் செய்வதற்கு இந்தக் கிராமம் பயன்பட்டது என்பது இன்றும் பலருக்குத் தெரியாது.

கடற்பகுதியை வெளிப்புறமாகக் கொண்டு இயற்கை வனப்புகளால் அழகை அள்ளி சொரிகிறது கப்பூது கிராமம். இந்தக் கிராமத்துக்கான வீதியின் இருமருங்குகளும். ஒருவழி தரைப்பாதையாக போக்குவரத்து செய்ய முடியாத அளவுக்கு வீதி புனரமைக்கப்படாமல் இருந்தும் அந்தப் பாதையைத் தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பாதையாக செல்லும் போது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு உத்வேகம் ஏற்படும். காரணம் ஈழப்போராட்டத்திற்கு இந்த கிராமம் தளபதி விதுசாவை உவந்தளித்த பெருமைக்குரிய மண். பெண் தளபதிகளில் பெயர் சொல்லும் தளபதி விதுசா. பல களமுனைகளைக் கண்ட தளபதி விதுசா. அதனால் தான் என்னவோ இந்த கிராம மக்கள் போராட்டத்திற்கு துணையாக அதிகம் உழைத்தனர்.

இன்றும் இந்த கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஆலய பூசகராக கந்தையா எனப்படும் விதுசாவின் தந்தையே பூசை செய்து வருகிறார்.  தன்மகளை மண்ணுக்காக தந்துவிட்டு விதுசாவின் தயார் இன்றும் மிடுக்குடன் நிமிர்ந்து நிற்கிறார். அச்சு அசலாக இன்னொரு விதுசாவை மனக்கண்முன் கொண்டு வந்து ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அவரின் தோற்றம் அமைகிறது.

இக்கிராமத்தில் ஒரு பாடசாலை தான் இருந்தது. அந்தப் பாடசாலையும் இயங்காமல் பலவருடங்கள் கடந்து விட்டன. இதனால் இந்தக் கிராம மக்களில் பலர் அயல் கிராமங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். பாடசாலை தனது செயற்பாடுகளை இடைநிறுத்தி கொள்வதற்கு முன் இறுதியாக 12 பிள்ளைகள் கல்வி கற்றனர். 16 கிலோமீற்றர் தாண்டி மண்டான் பகுதியில் இருந்து குழாய் மூலம் இந்தக் கிராமத்துக்கு தண்ணீர் வருகிறது. அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது என்றாலும் நெல்லியடிக்குச் சென்று வருகின்றனர். இந்த கிராம மக்கள் பொலிஸ் முறைப்பாடுகள் செய்வதற்காக கூட 14 முஆ  தூரமுள்ள நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் இன்று உள்ளனர். ஏதாவது குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் உடனடியாக நடவடிக்கை செய்வதற்கான எந்த திட்ட வரைவுகளும் இந்த கிராமத்தில் இல்லை இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இப்பகுதி மக்கள் வடமராட்சி பகுதியில் குடிபெயர்ந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் நிறுத்த சமாதான காலப் பகுதியில் இந்தக் கிராமத்தில் மக்கள் பல்கிப் பெருகிக் காணப்பட்டனர். அன்று குடியிருப்புக்களாக காணப்பட்ட இக் கிராமத்தின்  தற்போதைய சூழல் திரைப்பட நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் வரும்  இந்தியாவின் அத்திப்பட்டி கிராமத்தை தான் ஞாபகமூட்டும் அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எவருமே கண்டு கொள்ளாத கிராமமாக மாறிவிட்டது. தமிழர்களை உலகறியச் செய்த விடுதலைப் போராட்டத்துக்கு பெரும் பங்காற்றிய இந்தக் கிராமத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்குமே தலைகுனிவாகும்.

1987 வடமராட்சிப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் இலங்கை இராணுவம் ஒபரேசன் லிபரேசன் என்ற பெயர் சூட்டி இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிப் பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இந்தக் காலப் பகுதியில் யாழ்பாணத்திற்கும்-வடமராட்சிக்குமான பிரதான இணைப்பு வீதியாக இந்த கப்பூது வீதியே காணப்பட்டிருந்தது.

போர் வரலாறு கொண்ட இந்தக் கிராமத்தில் இன்று மக்கள் குறைவாக வாழ்கின்றனர். இந்தக் கிராமத்தை தெரியாத விடுதலைப் புலிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More