Home இலக்கியம் “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் – துலாஞ்சன் விவேகானந்தன்:-

“ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் – துலாஞ்சன் விவேகானந்தன்:-

by admin

சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.

இந்த இடத்தில் தான் நுண்வரலாறுகள் (Micro histories) கைகொடுக்கின்றன. ஒரு ஆய்வுப்பொருள் பரந்த எல்லைக்குள் அடங்கும்போது, அதை தனிநபர் அல்லது தனிச்சமூகம் அல்லது குறித்த புவியியல் பிராந்தியம் சார்ந்து வரையறை செய்து கட்டியெழுப்புவதே, நுண்வரலாறு எனப்படுகின்றது. இத்தகைய நுண்வரலாறுகளின் தொகுப்பாக முழு வரலாறு உருவாக்கப்படும்போது, அது ஐயத்துக்கிடமற்ற நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டிருக்கும். அண்மையில் சொ.பிரசாத், க.சபாரெத்தினம் ஆகியோரால் எழுதப்பட்டு, மறுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூலை, இத்தகைய ஒரு நுண்வரலாறு என்ற கண்ணோட்டத்தில் தான் அணுகவேண்டும்.

கண்ணகி வழிபாட்டுக்கும் கிழக்கிலங்கைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத பந்தம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சிங்களவர், வடபகுதித் தமிழர் என்போரிடமும் கண்ணகி தெய்வமாக விளங்கினாலும், கீழைத்தமிழருடனான அவளது நெருக்கத்துக்கு விடை தேடும் ஆய்வுகள், அறிவார்ந்த பார்வையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கீழைக்கரையின் ஒவ்வொரு கண்ணகி ஆலயங்களும் தத்தம் நுண்வரலாறுகளை முறைப்படிப் பதிவு செய்யும் போது, இக்கேள்விக்கு நம்மால் இலகுவாகப் பதில்காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே 1985களில், “செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்” எனும் நூல், அவ்வாலய பரிபாலன சபையினரால், வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல், 1998இல் ந.நவநாயகமூர்த்தியால் “தம்பிலுவில் கண்ணகி வழிபாடு” எனும் நூல் வெளியிடப்பட்டது. இன்னொரு முக்கியமான நூலாக, 2014இல் வெளியான காரைதீவுக் கண்ணகி அம்மன் ஆலயக் கும்பாபிஷேக மலரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் அடுத்ததாக வந்து இணைந்திருக்கிறது “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூல்.

அ முதல் எ வரை ஏழு இயல்களாக இந்நூல் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் இயலானது கண்ணகி வழிபாடு, கண்ணகியின் முற்பிறவிக்கதைகள் பற்றி அறிமுகம் செய்கின்றது. இலங்கையின் வட- கிழக்கு மற்றும் மேற்குப்பகுதியில் பிரபலமாக இருந்துவரும் “வெடியரசன் – மீகாமன்” தொன்மம், சமீபகாலமாக இலங்கைச் சமூகவியல் ஆய்வுகளில் பரவலான கவனிப்பைப் பெற்றுவருகின்றது. கண்ணகி தொடர்பான மூதிகங்களில் மீகாமனின் வகிபாகத்தையும் இந்நூல் இவ்வத்தியாயத்தில் தொட்டுச்செல்கின்றது.இரண்டாம் இயல் கண்ணகி வழிபாடு இலங்கையில் பரவியது தொடர்பான ஐதிகக்கதை ஒன்றுடன் தொடங்குகின்றது. மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ‘யாழ்ப்பாணத்து ஒத்துக்குடா கந்தன் ஏழு கண்ணகை அம்மன் சிலைகளுடன்’ மட்டக்களப்பு வந்ததும், அவற்றில் ஒரு சிலையின் மூலம் மண்முனையில் கண்ணகி வழிபாடு ஆரம்பமானதும்,  மண்முனை வழிபாடு இ்டம்பெயர்ந்து ஆரையம்பதிக் கண்ணகை வழிபாட்டுடன் இணைந்துகொண்டமை என்பதும் இங்கு ஏற்கத்தக்க ஆதாரங்கள் மூலம் நிறுவப்படுகின்றது.

மூன்றாம் இயல், ஆலய அமைவிடத்தையும் அமைப்பையும் விவரிக்கின்றது. நான்காம் இயலில் ஆலய சடங்குகள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. ஆரையம்பதிச் சடங்கின் எட்டு நாட்களும் நிகழும் நிகழ்வுகளும், அவற்றில் முக்கியமான கதவு திறத்தல், கல்யாணச்சடங்கு, கப்பல்காரர் சடங்கு, பச்சைகட்டிச் சடங்கு, கும்பம் ஊர்சுற்றல், குளிர்த்திச்சடங்கு என்பன பற்றிய விவரணங்களும் இவ்வியலில் உள்ளன.

ஐந்தாம் இயல் அன்னையின் அருளாடல்களைச் சொல்வதாக அமைந்துள்ளது. பத்தக்கட்டாடியார் பூசகராக இருந்த காலத்தில் நாவிதன் புலவன் காவியம் பாடியது, அம்மன் பேழையைத் திறந்து பார்க்க முற்பட்ட நம்பியாருக்கு பார்வை பறிபோனது, ஆலய நாகபாம்பைக் கொன்றோரின் வதிவிடமான கள்ளியம்பிட்டி தீப்பற்றி எரிந்தது, ஆடிப்பூரமன்று மூடிய கதவுக்குள் உடுக்கை ஒலித்தது, கடும்போக்கு போலீஸ் அதிகாரி ஒருவரைக் குளவிகொட்ட வைத்துத் திருத்தியது, போன்ற மெய்சிலிர்க்கவைக்கும் சம்பவங்கள் இந்த இயலில் பதிவாகி இருக்கின்றன.

அடுத்த இயல் குளிர்த்திப்பாடல், கல்யாணக்கால் சுற்றுக்காவியம், வரலாற்றுக்காவியம், அற்புதக்காவியம் முதலான கண்ணகி இலக்கியங்களைத் தன்வசம் கொண்டிருக்க, இறுதி இயல், பின்னிணைப்பாக வரைபடத்துடனும் ஆலயப் புகைப்படங்களுடனும் நிறைவுறுகின்றது.

கண்ணகி வழக்குரையும் கோவலனார் கதையும் ஒரே நூலின் இரு வேறுமங்கள் (versions) என்ற போதிலும், பெரும்பாலான கீழைக்கரை கண்ணகி ஆலயங்களில், கண்ணகி வழக்குரையே பாடப்பட, ஆரையம்பதியில் மாத்திரம் கோவலன் கதை பாடப்படுகிறது என்ற தகவல் புதுமையானது. இன்னும், மண்முனையில் கண்ணகை அம்மனின் பழைய ஆலயம் இருந்த இடத்தில் 1990களில் காளியம்மன் ஆலயமொன்று நிறுவப்பட்டுள்ளமை, ஆரையம்பதிக் குடிமகன் ஒருவராலேயே திருக்கோணமலை உவர்மலைக் கண்ணகி அம்மன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டமை, மஞ்சந்தொடுவாய்க்கு ஆரையம்பதி அம்மன் கொண்டுசெல்லப்பட்டு ஆனி மாதம் குளிர்த்தி நடாத்தப்பட்டமை முதலான சுவையான தகவல்களும் இந்நூலில் உண்டு.

பச்சைகட்டிச் சடங்கு, கப்பல்காரர் சடங்கு போன்றவை ஆரையம்பதிக் கண்ணகை சடங்கில் முக்கிய இடம் வகிப்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அவற்றில் ஏதேனும் விசேடமாகக் குறிப்பிடத்தக்க மரபுகள் உள்ளதா என்ற விவரம் காணக்கிடைக்கவில்லை. ஆரையம்பதி பச்சைகட்டிச் சடங்கில் கனியாத காய்கள் படைப்பது முன்னிலைப்படுத்தப்படுவதாக இந்நூல் சொல்லும். ஆனால், ‘பச்சைகட்டி’ என்ற சொல்லாடல், காரைதீவுக் கண்ணகை அம்மன் கோயிலிலும் வழக்கில் உண்டு. அங்கு சடங்கு நாட்களில், தினமும் பகல் பூசையில் படைக்கப்படும் கறியமுதே அவ்வாறு சொல்லப்படுகின்றது என்பதை இங்கு நினைவுகூரலாம். இவ்விரு ஆலய நடைமுறைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, ‘பச்சைகட்டிச்சடங்கின்’ தோற்றம் தொடர்பான மேலதிக விவரங்கள் கிடைக்கக்கூடும்.

காலக்குழப்பங்கள் ஏற்படும் போதும், கண்ணகியின் முற்பிறவி வரலாற்றைக் கூறி தர்க்கரீதியில் அதை நிறுவமுயலும் போதும், வைகாசி மாதத்தில் கண்ணன் சடங்கு நடந்தபிறகே கண்ணகிக்கு சடங்கு நடப்பதால், கண்ணன் வழிபாட்டோடு – குறிப்பாக – கம்சனோடு கண்ணகியைத் தொடர்புபடுத்தும் போதும், இந்நூல் முழுமையான வரலாற்று நூல் என்ற பார்வையிலிருந்து ஓரளவு விலக எத்தனிக்கின்றது. அவற்றை எதிர்கால ஆய்வுகளுக்காக விட்டுச்செல்லப்பட்டுள்ள நாட்டார் தொன்மங்கள் என்று சமாதானம் செய்துகொள்ளும் போது, அந்த வழுவை புறக்கணிக்கமுடிகின்றது.

இவை தவிர எல்லாவிதத்திலும் முழுமையாக இருந்தாலும், திருஷ்டிப்பொட்டு போல, இந்நூலில் குறிப்பிட்டே ஆகவேண்டிய குறை, எழுத்துப்பிழைகள். அதிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ‘இயல்’ எல்லாம் ‘இயல’ என்று அச்சிடப்பட்டிருப்பதும், அதிலும் ஐந்தாம் இயல் மீண்டும் ‘அறிமுகம்’ என்றே தலைப்பிடப்பட்டிருப்பதும், நூல் திருத்தமாகச் சரவை பார்க்கப்படவில்லை என்பதை நெருடலுடன் உணர்த்தியது. எழுத்துப்பிழை ஏற்பட்டதற்கான தவிர்க்கமுடியாத காரணங்கள் இருக்கக் கூடும் என்றாலும், ‘மறுகா’ போன்ற இலக்கியம் சார்ந்து இயங்கும், புகழ் பெற்ற பதிப்பகமொன்றின் வெளியீடு என்னும்போது, இந்நூலின் எழுத்துப்பிழைகளை இயல்பாகக் கருதிக் கடந்துபோக முடியவில்லை.

இது ஒன்று தவிர, ஆய்வுக்கண்ணோட்டத்தில் தேடுவோருக்கு அருமையான குறிப்புகள் பல இந்நூலில் கிடைக்கின்றன. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டபடி, “கிழக்கிலங்கைக் கண்ணகி வழிபாடு” எனும் ஆய்வுப்பரப்பை ஆழம் பார்க்க முயல்கின்ற முக்கியமான நுண்வரலாற்று ஆவணமாக ‘ஆரையூர்க் கண்ணகை’ நூல் தன்னை நிரூபித்து இருக்கிறது. அருமையான ஒரு நூலைப் படைத்தளித்த ஆசிரியர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

கிழக்கிலங்கையின் ஏனைய கண்ணகி ஆலயங்கள் ‘ஆரையூர்க் கண்ணகை’யைப் பின்பற்றி தத்தம் ஆலயங்களையும் ஆவணப்படுத்தவேண்டும் என்பது இக்கட்டுரையாளனின் வேணவா. அப்படி அவை எல்லாவற்றிலும் இழையோடும் பொதுச்சரட்டைக் கண்டடையும் கணத்தில் “கிழக்கு எதிர் கண்ணகை” என்ற மாபெரும் புதிர் அவிழும். அப்புதிர் அவிழ்வதானது, கீழை இலங்கைக்கு மாத்திரமன்றி, முழு ஈழத்தமிழருக்குமே மிக முக்கியமான வரலாற்றுத்திறப்பாக திகழும் என்பதே இங்கு நாம் குறிப்பாகச் சுட்டிக்காட்டவேண்டியது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More