மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு திறமையான ஆசிரியர்கள் 3000 பேரை உள்வாங்குவதற்கான அனுமதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வழங்கியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்கள் உள்வாங்கப்பட உள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
கண்டி கெங்கல்லை தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8 வகுப்பறைகளை கொண்ட இரண்டு மாடிக்கட்டடிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கட்டடம் அமைப்பதற்கான முழுமையான நிதியை கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் வழங்கியிருந்ததுடன். அதற்கான மூன்றாவது மாடியையும் அமைத்து தருவதற்கும் இவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அங்கு பேசிய இராதாகிருஸ்ணன்
யார் ஆட்சி செய்தாலும் எமக்கு அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களிடம் இருந்து எமது சமூகத்திற்கான அனைத்து தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுடன் இணைந்திர்ப்பவர்களின் கரங்களிலேயே தங்கியிருக்கின்றது.
அந்த வகையிலேயே அன்மையில் பிரதமரை சந்தித்த பொழுது ஆசிரியர் பற்றாக்குறையே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது என்று தெரிவித்திருந்தேன் அதற்கு அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்இது தொடர்பாக கலந்துரையாடி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
அதன் அடிப்படையில் எதிர்வரும் 28.06.2017 அன்று இது தொடர்பான விசேட கலந்தரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன் பின்பு வர்த்தமாணி அறிவித்தலின் ஊடாக ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.