Home இலங்கை விசாரணைக்குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறார் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சர்.

விசாரணைக்குழுவுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறார் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சர்.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விசாரணை குழுவுக்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.  யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

விசாரணை அறிக்கையில் எந்தவெரு இடத்திலும் வடக்கு விவசாய அமைச்சர் ஊழல் மோசடி செய்தார் என்றோ இலஞ்சம் வாங்கினார் என்றே குறிப்பிடப்படவில்லை.  குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் ஒரு வருடங்களுக்கு முன்பு நன்கு திட்டமிடப்பட்டு ஆதாரமில்லாமல் சபையில் கொண்டு வரப்பட்டது.

இப் பிரேரணையானது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஒருவரின் ஊடாக கொண்டுவர முயற்சிக்கப்பட்டபோதும் அவ் உறுப்பினர் அதன் உண்மை நோக்கம் அறிந்து அதனைத் தவிர்த்திருந்தார்.இதன் பின்னர் வேறு ஒரு உறுப்பினர் ஊடாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது நிதிக் குற்றச்சாட்டு இலஞ்சம் மோசடி எதுவும் நிகழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என குறிப்பிட்டதன் பின்னரும் நிதிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர் என என்னை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டதானது அவர் பொய் உரைத்தமையை தெளிவுபடுத்துவதுடன் அவரது சட்ட நீதியை கேள்விக்கும் உள்ளாக்கியுள்ளது.

என் மீதான குற்றச்சாட்டு விசாரணை அறிக்கையில் முடிவுரையில் நிரூபிக்கப்படாத ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் பதவி விலகவேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்கள்.

இது தொடர்பில், இவ் விசாரணைக் குழுவானது ஏதோ ஒன்றுக்கு சோரம்போன விசாரணையாளர்களாகவே இவர்கள் இருந்துள்ளார்கள் என நான் பதிவு செய்கிறேன். மாறாக என் மீதான நிதிமோசடியை அவர்கள் நிரூபித்திருந்தால் அவர்களது தீர்ப்பை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்.

என்னைப் பொறுத்தவரையில் இவ் விசாரணை அறிக்கையானது நூற்றுக்கு நூறு வீதம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு ஓர் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முடிவை எடுத்து வைத்துக் கொண்டு ஆதாரங்களை தேடியுள்ளார்கள்

இவ் ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்பதையே காரணமாக வைத்துக் கொண்டு இத் தீர்ப்பை எழுதியிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் விவசாய அமைச்சர் நிதிக்குற்றச் சாட்டுக்களில் நிரூபிக்கப்பட்டவர் என செய்திகள் வெளியாகுமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவர்கள் மீது மாத்திரமன்றி இவ் விசாரணை குழுவுக்கு எதிராக நீதிமன் றம் செல்லவுள்ளேன்.இது என்னால் தவிர்க்கமுடியாத ஒன்று.

நான் சுற்றவாளி என நிரூபிக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் செல்ல வில்லை. எனது மனச்சாட்சிக்கு என்னை ஆதரித்தவர்களுக்கு என் பின்னால் உள்ளவர்களுக்கு நான் யார் என்று தெரியும்.

ஆனால் நான் நீதிமன்றம் செல்வது திணைக்களம் சார்ந்த வடக்கு மாகாணத்தின் நன்மைக்காகவே இவ் விசாரணை அறிக்கையின் உண்மைத்தன்மை தொடர்பில் நீதி மன்றம் செல்லவுள்ளேன்.இவர்கள் கொள்கை ரீதியான சில முடிவுகளை பிழை எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

விசாரணையாளர்கள் ஏனோதானே என எழுதியுள்ள இவ் அறிக்கை பொய் என்பதை சாதாரண மாகாணசபை உறுப்பினரான சாதாரண பொது மகனாக நீதிமன்றம் செல்லவேண்டிய தேவை எழுந்துள்ளது.

எதிர்காலத்தில் இப் பிழையான தீர்ப்பின் மூலம் வடக்கு மாகாணத்திற்கு ஏற்படக்கூடிய நம்மைகள் பாதிப்படையக் கூடாது என்பதற்காகவே நான் நீதிமன்றம் செல்லவுள்ளேனே தவிர மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்காக அல்ல.

விசாரணையாளர்கள் ஐங்கரநேசன் தனக்கு அதிகாரம் இல்லாத விடயங்களில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் சுற்று நிரூபங்களுக்கு கட்டுப்பட்டு இவ் ஆட்சி நடைபெறுமாக இருந்தால் மாகாண சபை என்பது தேவையில்லை.

மாகாண சபை வருவதற்கு முன்பே இங்கு திணைக்களத் தலைவர்களின் கீழ் நிர்வாகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அப்படியாயின் இந்த ஆட்சியே போதுமானதாக இருந்திருக்கும் நாங்கள் அதிகார மீறல் எனக் குறிப்பிடப்படுவது மாகாண சபையின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் பொதுவான ஒருங்கு நிரலில் இருக்கக்கூடிய விடயங்களை எங்களுக்குச் சாதகமாக வாசிப்புச் செய்தோம் இதில் தவறு எதுவும் இல்லை. இதில் சுற்றுச் சூழல் விடயம் தொடர்பில் மாகாண சபைக்கு எங்கேயும் அதிகாரம் இல்லை எனக் குறிப்பிடவில்லை.

ஆனால் அவ் அதிகாரத்தை மத்திய அரசாங்கத்திற்கு தாரைவார்க்கும் மனோநிலையில்தான் இத் தீர்ப்பை விசாரணையாளர்கள் எழுதியுள்ளார்கள்.

ஆகவே சுற்றுச் சூழல் தொடர்பில் காப்பாற்றவேண்டிய பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எங்களுக்குள்ளது. அரசாங்கம் விரும்பியது போன்று செய்வதற்கு நாங்கள் தடையாக இருக்கின்றோம். என்பதற்காகவே சுற்றுச் சூழல் அதிகாரம் வடக்கு மாகாணசபைக்கு செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்கள்.

இத் தீர்ப்பின் ஊடாக இனி எந்த ஒரு அமைச்சர் வந்தாலும் சுற்றுக்சூழலுக்கு பாதிப்பான கல், மணல், கனியவள அகழ்வுகள் இடம்பெற்றால் அல்லது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பான எந்தவெரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அதனை தடுப்பதற்கு முடியாது போகும் என்பதுடன் இத் தீர்ப்பை அதற்குச் சாதகமாகவும் பயன்படுத்துவார்கள். எனவே இது விடயம் தொடர்பிலும் நாங்கள் நீதிமன்றம் செல்லவுள்ளோம்.

மேலும் வடக்கில் பாதிப்பான தொழிற்துறைகளை ஆரம்பிக்க தெற்கத்தைய பேரினவாத அரசாங்கம் முயற்சித்தபோது அதனை நான் நிராகரித்தமையால் அவர்கள் விரும்பியதை செய்யக்கூடிய ஒரு அமைச்சர் வடக்கிற்கு தேவையாக இருந்தமையினாலும், முதலமைச்சருக்கு பக்க பலமாக நான் இருப்பதால் அதனையையும் விலத்தவேண்டும் என்பதற்காகவும் ஆகியவற்றுக்காகவுமே என் மீதான இவ் குற்றச்சாட்டுச் சதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இவ் ஊடக சந்திப்பின் ஊடாக நான் கூறவருவது வடக்கில் இப்போது ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையை ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் சுருக்கிப் பார்க்காது அதற்கும் அப்பால் எங்களுடைய தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆயுத வழிப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு ஜனநாயக வழியில் அடுத்த கட்டத்திற்கு இப்போராட்டத்தை கொண்டு செல்லுவதற்கு ஒருதலைவர் தேவைப்படுகிறார்.

அந்தத் தலைவர் விக்னேஸ்வரனாக அமைந்துவிடக் கூடாது. அவ்வாறு அமைந்துவிடடால் அது அரசாங்கத்திற்கும் பேரினவாதிகளுக்கும் உள்ளூர் ஆட்சியாளர்களுக்கும் பாதிப்பாக அமைந்துவிடும் என்பதனாலேயே இந் நாடகம் அரங்கேற்றப்பட்டது எனத் தெரிவித்தார்.

அதேவேளை முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தவர்கள் முதலமைச்சருக்கு எதிராக வருமாறு எனக்கும் அழைப்பு விடுத்தனர்.

அதனை நான் ஏற்கவில்லை. நான் பதவிக்காக ஆசைப்படவில்லை. தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுபவன்.அதன் கொள்கைகளில் இருந்து என்றைக்கும் தடம் மாற மாட்டேன் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More