குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளது, இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆபத்தானது என மனித உரிமை மையம் மற்றும் University of Pretoria’s Institute for International and Comparative Law in Africa ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி இந்த விடயம் பற்றி அறிவித்துள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது மனித உரிமை முறைப்பாடுகளை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் வகையிலேயே உத்தேச சட்டம் அமைந்துள்ளது என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத கைதுகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது எனினும் இந்த சட்டமும் ஆபத்தான வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்தல், விசாரணைக்கு உட்படுத்தல், சொத்துக்களை முடக்குதல், நீண்ட காலம் தடுத்து வைத்திருந்தல், பயணத் தடைகளை விதித்தல், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தல் போன்ற அடக்குமுறை சார் விடயங்களே இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் எவ்வித விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.