கிழக்கில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் அமெரிக்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்றபோதே இவ்வாறு கலந்துரையாடப்பட்டதாக கிழக்கு மாகாணசபையின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஐக்கிய அமெரிக்க தூதரக அதிகாரிகளான ராபர்ட் ஹோல்புரூக்,ஸ்டீபன் எம் பாக்ஸ்டன் ஆகியோர் பங்கேற்றதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை,எம் லாஹிர் உட்பட முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கின் உள்ளூராட்சி மன்றங்களின் வினைத் திறனை அதிகரித்து அவற்றை இலாபமீட்டும் ஸ்தாபனங்களாக மாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.